இரா.மோகன்.தரங்கம்பாடி.செய்தியாளர்.
மயிலாடுதுறை மாவட்டம்
தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் ஓசோன் காற்று அதிக அளவில் வீசுகிறது. உடல் நலத்துக்கு நன்மையளிக்கக் கூடிய ஓசோன் காற்றை சுவாசிப்பதற்காக இப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
பொறையார் பேருந்து நிலையத்திலிருந்து மாணவ,மாணவிகளுக்கு தனி தனியாக நடைபெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த மராத்தான் போட்டியில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேருந்து நிலையத்தில் துவங்கிய மராத்தான் ஓட்டமானது 4 கிலோ மீட்டர் தூரம் சென்று தரங்கம்பாடி கடற்கரையில் முடிவடைந்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
தொடர்ந்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், பேரூராட்சி தலைவர் சுகுன சங்கரி குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.