திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வீடியோ எடுத்தவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பாதுகாப்புக் கருதி செல்லிடப்பேசிகள் உள்பட எந்த மின்னணு சாதனத்தையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலிருந்து இரண்டு கட்ட சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். சோதனைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலுக்குள் தன்னுடைய தொலைப்பேசியைக் கொண்டு சென்று ஆனந்த நிலையம் மற்றும் கருவறைக்குச் செல்லும் வழி உள்ளிட்டவற்றை விடியோ பதிவு செய்துள்ளார்.

ஆனந்த நிலையமானது, தங்க பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு கோயில் முழுவதும் மின்னுகிறது. இந்த விடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, இப்படி ஒரு சம்பவம் நடந்ததே திருப்பதி திருமலை கோயில் நிர்வாகத்துக்குத் தெரிய வந்துள்ளது. உடனடியாக கோயில் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விடியோவைப் பதிவு செய்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, விடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோயில் நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் இருக்கும் சிசிடிவி கேமராப் பதிவுகளும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, விடியோ எடுத்த நபரின் அடையாளத்தைக் காணும் பணிகள் தொடங்கியுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *