மலேசியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் வலங்கைமான் மாணவர்கள் பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார்கள். மலேசியாவுக்குச் சென்றுவந்த உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள் தங்கள் பெற்ற வெற்றிகளை மகிழ்ச்சியோடு நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் நடத்திய உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் மலேசிய தலைநகர் கோலாம்பூரில் கடந்த மே 7 ஆம் தேதி நடந்தது. இதில் வலங்கைமான் அடுத்த மருதாநல்லூர் யூனிவர்ஷல் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் மாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் பல்வேறு சாதனைகளைச் செய்து பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ,ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் களமிறங்கிய இந்தப் போட்டியில் மாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி சார்பில் 4 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் வலங்கைமான் மற்றும் கும்பகோணத்தை சார்ந்த மாணவர்கள் 1 தங்கப்பதக்கமும், 6 வெள்ளிப் பதக்கமும் 1 வெங்கல பதக்கமும் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் எஸ்.சந்தியா என்ற மாணவி 20 வயதுக்கு மேற்பட்ட ஒற்றை கம்பு பிரிவில் தங்க பதக்கமும் , ரம்யா என்ற மாணவி 18 வயதுக்கு மேற்பட்ட ஒற்றை கம்பு பிரிவில் வெள்ளிப் பதக்கமும், இரட்டை கம்பு பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ரக்ஷவேந்தன் என்ற மாணவர் 15 வயதுக்குட்பட்ட ஒற்றை கம்பு பிரிவில் வெள்ளிப் பதக்கமும் , தொடு முறை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், வேல் கம்பு பிரிவில் வெள்ளிப் பதக்கமும் , சான்வி சச்சினி என்ற மாணவி 10 வயதுக்குட்பட்ட ஒற்றை கம்பு பிரிவில் வெண்கலப் பதக்கமும், வேல் கம்பு பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மற்றும் குழுதிறன் போட்டியில் மூன்றாமிடம் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கும் , பயிற்சி அளித்த மருதாநல்லூர் மாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளியின் நிறுவனரும் பயிற்சியாளருமான ராஜமணிகண்டனுக்கும் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மத்திய கிழக்கு மண்டலத்தின் சார்பிலும் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் சிலம்பம் சுதாகரன், சர்வதேச செயலாளர் ரமேஷ் குமார் , ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணைத் தலைவருமான கே.கார்த்திக், பொருளாளர் மோகன் குமார், மலேசியா எம். ஜி. ஆர் என்று அழைக்கப்படும் காசிராமன், எம்ஜிஆர் சிலம்பத்தின் நிறுவனர் மோகன ராமன் , மாநில செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் பாராட்டினர்.

தமிழரின் பாரம்பர்யக் கலையில் சிறந்து விளங்கும் இவர்களுக்கு அரசும், தனியார் நிறுவனங்களும் நிதிஉதவி செய்தால் உலக அளவில் இன்னும் பல சாதனைகள் படைக்க பேருதவியாக இருக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *