குழந்தைகளுக்கான சைக்ளிங் நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் ஜூன் 18ம் தேதி நடைபெறுகிறது!

கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 சார்பில் குட்டி ரோடீஸ் எனும் குழந்தைகளுக்கான சைக்ளிங் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஜூன் 18ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

இதன் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப் பில் நடைபெற்றது.இந்த சந்திப்பின் போது கோயமுத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186ன் தலைவர் ராகுல் இதுபற்றி கூறுகையில்:-

குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்புகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நிகழ்வின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். 2019ல் இது முதன் முதலாக நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்றனர். தற்போது இதை இரண்டாவது முறையாக நடத்த உள்ளோம். இதில் 1200 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

7ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.இதில் 500 மீட்டர், 1 கிலோ மீட்டர், 2 மற்றும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டும் நிகழ்வுகள் நடைபெறும்.

குழந்தைகள் எப்படி சாலை விதிகளை பின்பற்றி சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதை பற்றி அவர்கள் தெரிவிக்கப்படும். இது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள ஒரு தருணமாக நிச்சயம் இருக்கும்.

இதில் பங்கேற்க www.kuttiroadies.com எனும் இணைய தளத்தில் ரூ.749 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அணைத்து குழந்தைகளுக்கு தலைக்கவசம், காலை உணவு, டீ-ஷர்ட், பங்கேற்பு சான்றிதழ், பதக்கம் மற்றும் பை வழங்கப்படும்.

இந்த நிகழ்வை நடத்துவதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு எங்கள் சமுதாய திட்டங்களில் ஒன்றான ‘ கல்வி மூலம் சுதந்திரம்’ (Freedom Through Education) திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புது வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டித் தர உள்ளோம்.

கடந்த 17 ஆண்டுகளில் நாங்கள் 35 வகுப்பறைகளும் பல கழிப்பறைகளும் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டி தந்துள்ளோம்.

இந்தாண்டு எங்கள் சங்கம் சார்பில் கணுவாய் அரசு உயர் நிலை பள்ளி மற்றும் காரமடையில் உள்ள அரசு பள்ளியிலும் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்ட உள்ளோம். இந்த நிதிகள் அனைத்தும் 100% சமூக நல திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஆர்.டி.ஐ. ஏரியா 7ன் துணை தலைவர் பங்கஜ் கலந்து கொண்டார். அவருடன் டேப்ளர்கள் வம்சி, விக்னேஷ், விஷ்ணு, நவீன், கரண் மற்றும் நிஹல் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *