நகரங்களில் வாழ்பவர்கள் தமிழர்களின் கலை பண்பாட்டை அறிந்து கொள்ளவும் தமிழர்திருநாளின் சிறப்பை அறியும் வகையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் விழா வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறது.
இதன் தொடக்கவிழா வெள்ளிக் கிழமை சென்னை தீவுத் திடலில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள 16 இடங்களில் ‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது.
600 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டுகளிக்கலாம். தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, ராகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, மே தின பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது.


நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நம்ம ஊரு திருவிழாவில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *