தூயதமிழ் இளைஞர் பாசறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சுப்பீரியர் கிங்ஸ் இணைந்து மே மாதம் 10ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் வரை கோவையில் பள்ளி மாணவ மாணவிகளுக்குப் பிழையின்றித் தமிழ் பேச, எழுத, படிப்பதற்கான சிறப்புப் பயிற்சியை நடத்தியது.

தூயதமிழ் பயிற்றுநர் தமிழ் மணிகண்டன் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு 12 நாள்களும் தமிழை எளிமையாகக் கற்பித்தார். பட்டறையில் மாணவர்களிடையே பேச்சு பரதம் சிலம்பம் போன்ற கலைகள் அடையாளப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு நாளும் வகுப்பில் வாசித்தல் திறன், கவனித்தல் திறன், உற்று நோக்கல் திறன் மேம்பாடு, நற்பண்புகளை ஊக்குவித்தல் மற்றும் கையெழுத்துப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வியாழக்கிழமை 25-05-2023 அன்று காலை தூயதமிழ்ப் பயிற்சி பட்டறை நிறைவு விழா, தூயதமிழ் இளைஞர் பாசறையின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழா – நூல் வெளியீடு, மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தூயதமிழ் இளைஞர் பாசறையின் நிறுவுநர் தலைவர் தமிழ் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ம.இலக்கியவாணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

தூயதமிழ் இளைஞர் பாசறையின் அறிவுரைஞர் நற்றமிழ் செ.வ.இராமாநுசன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
தூயதமிழ் இளைஞர் பாசறையின் புரவலர் தி.வெங்கடகிருட்டிணன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சுப்பீரியர் கிங்ஸின் பட்டயச் செயலாளர் அருண்குமார் விழாவிற்கு முன்னிலை உரை வழங்கினர்.

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 12 நாள்கள் கோவையில் நடத்தப்பட்ட கட்டணமில்லாத் தூயதமிழ்ப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நற்சான்றிதழ்களும், புத்தகங்களும் பரிசாக வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பயிற்சி வகுப்பு குறித்த தனது மகிழ்ச்சியைக் கருத்துரையாக வழங்கினர். விழாவில்
ம.ஜனார்த்தனன்‌ அவர்கள் எழுதிய “என் வயது 15” நூலை கவிஞர் ரெங்க. லெ.வள்ளியப்பன் எழுச்சியுரையாற்றி வெளியிட, கம்பன் கலைக்கூடத்தின் நிறுவுநர் மருத்துவர் கு.சுப்பிரமணியம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சுப்பீரியர் கிங்ஸ் தலைவர்
ச.முகேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நூலாசிரியர் ம.ஜனார்த்தனன் தன்னம்பிக்கை உரை ஆற்றினார். மகளிரணியைச் சார்ந்த சு.விசயலட்சுமி நிறைவாக நன்றி கூறினார்.

விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. விழாவினை தமிழ் மணிகண்டன் ஒருங்கிணைத்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *