தேவாங்கு, முள்ளெலி, அலுங்கு, உடும்பு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள மதுரை இடையப்பட்டி கோவில்காட்டை பாதுக்காக்கும் விதமாக தமிழக அரசு இடையபட்டி கோவில்காட்டை “பல்லுயிர் சூழல் பகுதியாக” உடனடியாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்க
மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தேவாங்கும் – மதுரை இடையப்பட்டி கோவில்காடும்
கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து கோவில் நகரமாக மதுரை மாநகரம் உருவான கதை நமக்கு தெரியும். கடம்ப மரங்கள் அடர்ந்த கோவில் காடு ஒன்று மதுரை மாவட்டத்தில் இன்றும் உயிர்ப்போடு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டு வளர்ந்த கிராமங்கள் இன்று நம்மிடம் இல்லை. பாறு கழுகுகள் பறந்து திரிந்த வானம் இன்று நம்மிடம் இல்லை. மின்மினி பூச்சிகள் ஒளி பரப்பிய இரவுகள் இன்று நம்மிடம் இல்லை. எதெல்லாம் நம்மிடம் இருந்தது என்று தெரிந்தால் தானே, தொலைத்து விட்டோமே என்ற உணர்வோடு தேட முடியும். தொலைத்து விட்டோம் அல்லது தொலைக்கிறோம் என்ற உணர்வு இருந்தால்தான் தேடவோ, பாதுகாக்கவோ முடியும். நம்மிடம் என்ன வளம் இருந்தது, இருக்கிறது என்கிற அறிவும் உணர்வும் தான் நாளையை விடியலுக்கான ஒளிக்கீற்று.

மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா, தெற்கு ஆமூர் அஞ்சல், இடையபட்டி ஊரில் அமைந்துள்ளது வெள்ளிமலை கோவில்காடு. ஏறக்குறைய 460 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்காடு இன்று சுமார் 300 ஏக்கர் அளவுக்கு சுருங்கிவிட்டது. மிஞ்சி இருக்கிற 300 ஏக்கர் பசுமை பரப்பும் அரசின் பதிவேட்டில் தரிசு நிலம் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. இடையப்பட்டி கோவில்காடு நாளுக்குநாள் அரசின் பல்வேறு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. அதனை உடனடியாக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றும் தேவாங்கு, முள்ளெலி, அலங்கு, உடும்பு, புள்ளிமான், குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்விடமாக இடையப்பட்டி கோவில்காடு விளங்குகிறது. அது அழியும் நிலையில் இருக்கிறது. மதுரை இடையப்பட்டியில் சாம்பல் நிற தேவாங்குகள் இயற்கை ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகை தேவாங்குகள் உலகில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுபவையாகும். சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ மகண்மா ‘ எனும் சொல் தேவாங்கை குறிக்கும் என்று எழுத்தாளரும் ஆய்வாளருமான பி.எல். சாமி தனது ‘சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். காடுகள் அழிக்கப் பட்டதே தேவாங்கு களின் அழிவுக்கு முதற்காராணமாக இருக்கிறது. மேலும் மருத்துவம், குறிசொல்லுதல் உள்ளிட்ட மக்களின் நம்பிக்கையாலும் தேவாங்குகள் வேட்டையாடப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) மதிப்பீட்டின்படி அச்சப்படும் அளவு எண்ணிக்கையில் உள்ள (Near Threatened) உயிரினமாக மெலிந்த தேவாங்குகள் உள்ளன. இந்திய காட்டுயிர்கள் பாதுகாப்பு சட்டம் – 1972, பட்டியல் -1 ல் இவ்விலங்கு உள்ளது. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மக்களின் குரலும் – இந்திய காட்டுயிர்கள் பாதுகாப்பு சட்டமே மீதமுள்ள தேவாங்குகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக உள்ளது. எனவே இடையப்பட்டி கோவில்காடு பாதுகாக்கபட வேண்டியது முக்கியமான
தாகவும் உள்ளது. எனவே தேவாங்கு, முள்ளெலி, அலங்கு, உடும்பு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள மதுரை இடையப்பட்டி கோவில்காட்டை பாதுக்காக்கும் விதமாக தமிழக அரசு இடையபட்டி கோவில்காட்டை “பல்லுயிர் சூழல் பகுதியாக” உடனடியாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என
மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *