சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் விசாகன் மற்றும் தலைமை அலுவலக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:- அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். இதில் எந்தவித விதிமீறல்களும் இருக்கக்கூடாது. அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும். மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும். மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப்பட்டியல், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபான கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதிசெய்ய வேண்டும். முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள், அவரவர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் எதுவும் செயல்படும் பட்சத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும், மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களைக் கண்டறிந்து, காவல்துறைக்கு தெரிவித்து, அவர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மேலாளர்கள் தினந்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. அதில் எதுவும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். அப்பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து விதிமுறைகளையும் செவ்வனே செயல்படுத்தி அனைத்து நிலை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *