மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரெயில்வேயிடம் கேட்டிருந்தார். அதற்கு ரெயில்வே தெரிவித்த தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.70 கோடியாக இருந்தது. அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது. இந்த 2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, பல சிறிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைவிடவும் அதிகம் என்பது ஒரு சுவாரசிய தகவல். ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபடுபவர்கள், டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும். அந்த பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படுவார்.

அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த பயணி அப்போதும் அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். இதற்கிடையில், ரெயில்வேயின் தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் 2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுகிறது என பயணிகள் குறை தெரிவிக்கின்றனர். முந்தைய நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *