வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செங்கல் உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நெல், எள், பருத்தி உள்ளிட்ட வேளாண்மை பணிகளோடு, வேளாண்மை சார்ந்த தொழில்களான மீன் வளர்ப்பு, ஆடு ,மாடு வளர்ப்பு உள்ளிட்டவை களில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண்மை யோடு சின்ன சிவகாசி என அழைக்கப்படும் அளவிற்கு பட்டாசு உற்பத்தியும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் வலங்கைமானுக்கு பெருமை சேர்க்கும் விதமாக செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான் ஆற்றுக்கும் இடையே உள்ள நல்லூர், இனாம்கிளியூர்,கோவிந்தகுடி, அணியமங்கலம், சந்திரசேகரபுரம், பூண்டி, லாயம், ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், வலங்கைமான், மேல விடையல், கீழவிடையல், கருப்பூர், சித்தன்வாழர், தொழுவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைப்பெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் நல்ல நிறத்துடனும், வலுவாகவும் காணப்படுவதால் கட்டுமான பணிகளில் வலங்கைமான் செங்கற்களுக்கு தனிமவுசு உண்டு. இங்கு
உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் நீடாமங்கலம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்டங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்
பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்களை கொண்டு செல்லுவதற்கு ஏராளமான லாரிகள், டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.
செங்கல் உற்பத்தி வழக்கமாக ஜனவரி மாதத்தில் துவங்கினாலும், நெல் அறுவடைக்கு பிறகு மார்ச், ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைப்பெறுவது வழக்கம். செங்கல் உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார்
5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வலங்கைமான் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால், செங்கல் உற்பத்தியில் பெரிய அளவில் தடை ஏற்பட்டது இருப்பினும், தற்போது கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில்
செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் செங்கலுக்கு
நல்ல வரவேற்பும் உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *