திண்டுக்கல்லில் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்கியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி மற்றும் பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி கல்வி ஆண்டிற்கான புத்தகங்களை ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் – பழனி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக வட்டார அலுவலகத்தில் உள்ள பாடநூல் கிடங்கில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோர் வருகின்ற கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்கான புத்தகங்களை இன்று (29.05.23) ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ பெரியசாமி கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் பள்ளிகல்வித் துறை அமைச்சர் அவர்களிடமும், பாடநூல் கழக தலைவர் ஐ. லியோனி அவர்களுக்கும் ஏப்ரல் மாதத்திலேயே பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார், அதற்கான பணிகள் ஏப்ரல் மாதமே முடிக்கப்பட்டு விட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஏறத்தாழ 296 தனியார் பள்ளிகள் உள்ளது. 4 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகள் உள்ளனர். 296 பள்ளிகளில் கிட்டத்தட்ட 200 பள்ளிகள் புத்தகங்களை வாங்கி சென்று விட்டனர். மீதமுள்ளவர்களும் அவ்வப்போது புத்தகங்களை வாங்கி செல்கின்றனர், அதற்கான பணிகள் அதிவிரைவாக செய்யப்பட்டு வருகிறது. பள்ளி துவங்குவதற்குள் பாட புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு விடும் என்றும், அரசு பள்ளிகளுக்கு முன்னதாகவே புத்தகங்கள் சென்று சேர்ந்து விட்டன என்றும் கூறினார். மேலும் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பள்ளி கல்வித்துறை மிக சிறப்பாக தனது பணியை செய்து கொண்டுள்ளது என்றும், எவ்வித தட்டுப்படும் இன்றி புத்தகங்கள் வழங்கி வருகிறார்கள், ஏனென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, எனவே புத்தகங்கள் தட்டுப்பாடு இன்றி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும் தேனி மாவட்ட ஆட்சியரிடமும், வனத்துறையினரிடமும் கலந்து ஆலோசித்து மக்களுக்கும், யானைக்கும் எவ்வித சேதாரமும் இன்றி அரிசி கொம்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது என்றும், மேலும் கும்கி யானை கொண்டு மயக்க ஊசி செலுத்தி யானையை அடர்ந்த காட்டுக்குள் அனுப்பும் பணி தயாரான நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் காட்டு யானையை பார்ப்பதற்கும், அதனுடன் செல்பி எடுப்பதற்கும் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர். மக்களை கட்டுப்படுத்தும் பணியினால் யானையை காட்டிற்குள் அனுப்பும் பணி தாமதப்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். இதற்காக 150 க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மூன்று ஏ டி எஸ் பி, 2 டிஎஸ்பி, 1 எஸ் பி என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று இரவு கூட யானை மேகமலையில் இருந்து சுருளி கிராமத்திற்கு இறங்கி வந்து மீண்டும் மேகமலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வனத்துறையினர் தகவல் அளித்தனர். வனவிலங்கு சட்டத்திற்கு உட்பட்டு கும்கி அணையை வரவழைத்து தான் காட்டு யானையை அடக்க முடியும். எனவே காட்டுயானையை கும்கியாக மாற்றும் பணியை பற்றி வனத்துறையினர் தான் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். அரிசி கொம்பன் யானை நடமாட்டத்தை குறித்து தமிழக முதல்வர் வனத்துறையினரிடம் ஆய்வறிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாடநூல் கழகத் தலைவர் லியோனி பேசியதாவது:

தமிழக முழுவதும் மூன்று கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், பாடநூல் கிடங்கில் உள்ள புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்கான புத்தகங்கள் என்றும், இதனை பெறுவதற்கு அந்தந்த பள்ளிகள் இணைய வழி மூலம் பதிவு செய்து, அதற்கான கட்டணத் தொகையை இணைய வழி மூலமே செலுத்தி பாடநூல் கிடங்கில் புத்தகங்களை வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். தற்பொழுது பாடநூல் கழகம் சார்பில் மாணவர்களுக்கு அளிக்கக்கூடிய 11 பொருட்கள் மே மாதம் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே தயார் நிலையில் இருந்தது, இதனை ஜூன் மாதம் தமிழக முதல்வர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.

மேலும் தற்பொழுது உள்ள அரசு பள்ளிகளில் 75 சதவீதம் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பெற்றோர்கள் ஆங்கில வழி கல்விக்காக தனியார் பள்ளிகளின் நோக்கி செல்கின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தால் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்கள் கல்வி பயிலலாம் என்றும், இதேபோல் அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்குமாறு கூறினார். இதில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் திராவிட மொழிக் குடும்பம் என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த ஒரு பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை பற்றிய வாழ்கை வரலாறு ஒரு பாடமாகவே புத்தகத்தில் இணைக்கப்படும் என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *