பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாதத்தின் படி ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான ஆதாரத்தை பார்க்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பின்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த வீரர்கள், சுப்ரீம் கோர்ட் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரும், புகார் கூறப்பட்டவரை கைது செய்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது தவறானது. தமிழகத்தில் கவியரசு வைரமுத்து மீது எத்தனை புகார்கள் உள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தி பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது இலாகா மாற்றம் நடவடிக்கை மதுரை மண்ணுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் துரோகம். பி.டி.ஆர். ஒரு தவறும் செய்யவில்லை. முதல்வர் மீது கருத்து சொல்லியதற்காக தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என்றால் இந்த திராவிட மாடலில் யாருக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட செல்லும் போது, அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அப்படி தாக்கியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மேயராக மற்றும் பதவிகளில் உள்ளவர்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி ஒரு அரசு அதிகாரிகள் மீது இது போன்ற செயல்கள் செய்யும் நபர்களுக்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெரிய பாடமாக இருக்க வேண்டும். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எந்த வகையில் சரியாகும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது. நிச்சயமாக மேகதாது அணையை கட்டினால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. 6 மாதம் நடக்கும் இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *