புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார். இதன்படி வருகிற கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித்துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது. தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன. ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர். 4 முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாகியில் மலையாளமும் படித்தனர். தற்போது சி.பி.எஸ்.இ. முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்தித்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதுபற்றி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:- புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம். நீட், ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *