இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 654 ஆக உயர்ந்துள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 94 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதுபோல முதுகலை மருத்துவ படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 107 சதவீதம் உயர்ந்துள்ளது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் அவற்றின் தரத்தை உறுதிபடுத்துவதில் தேசிய மருத்துவ ஆணையம் தீவிரமாக உள்ளது. மருத்துவ கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்தியாவில் பல மருத்துவ கல்லூரிகள் விதிமுறைகளை பின்பற்ற தவறி இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரிகளின் தரம் குறைந்து இருப்பதாக கருதப்பட்டது. இதேநிலை நீடித்தால் சர்வதேச தர அளவுக்கு இந்திய மருத்துவர்களை உருவாக்குவதில் குறைபாடுகள் ஏற்படும் என்று புகார்கள் எழுந்தன. மருத்துவ கல்லூரிகளில் தரம் குறைந்துகொண்டே போனால் உலக அளவில் இந்திய டாக்டர்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டு விடும் என்று கூறப்பட்டது. இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த ஆணையம் நடத்திய ஆய்வில் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா இல்லாதது தெரியவந்தது. உள்கட்டமைப்பு வசதிகளும் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வருகையில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாடு முழுவதும் 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பேராசிரியர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார். மருத்துவ கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என்ற சிறிய காரணத்துக்காகவே அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் 1021 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தகுதியானவர்களை தேர்வு செய்து விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே தமிழகத்தில் 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குனரக குழு டெல்லி சென்றுள்ளது. இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமையில் அந்த குழு டெல்லி சென்றிருக்கிறது. இன்று அந்த குழுவினர் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர்கள் தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து தொடர்பாக முறையிட உள்ளனர். சென்னை, திருச்சி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை தேசிய மருத்துவ ஆணையம் பட்டியலிட்டுள்ளது. மேலும் இந்த 3 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக ஏராளமான கேள்விகளையும் தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுள்ளது. அந்த கேள்விகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரக குழுவினர் விளக்கம் அளிக்க உள்ளனர். இதற்காக அவர்கள் உரிய ஆவணங்களை தேர்வு செய்து கொண்டு சென்றுள்ளனர். ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் விரிவான பதில் தயார் செய்துள்ளனர். அவற்றையும் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க உள்ளனர். இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். நாளை அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனும் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு அவர் டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லியில் அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொள்வார். அதன்பிறகுதான் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து தொடர்பாக என்ன முடிவு எட்டப்படும் என்பது தெரியவரும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *