மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் என்று கூறினார். அதன்படி, தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 3 கட்டிடங்களை கொண்ட இந்த மருத்துவமனை, ஆயிரம் படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையை ஜூன் 3-ந்தேதியன்று கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து திறப்பதற்கு அரசு திட்டமிட்டது. அதற்காக கடந்த ஏப்ரல் 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து ஜூன் 5-ந்தேதியன்று நடக்கும் மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

எனவே இந்த விழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆனால் ஜூன் 5-ந்தேதி சென்னைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவில்லை என்ற தகவல் வெளியானது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதால் மருத்துவமனை திறப்பு விழாவை வேறு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ஜனாதிபதி அலுவலக தரப்பில் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் விழா தள்ளிவைக்கப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னைக்கு ஜூன் 15-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் ஜூன் 15-ஆம் தேதி திறந்து வைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *