திரளான பக்தர்கள் பங்கேற்பு


புதுவை அருகே மொரட்டாண்டி 27 அடி உயர சுந்தர விநாயகர் கோவில் மற்றும் துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் மயிலம் பொம்மபுர ஆதீனம் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. புதுவை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மொரட்டாண்டி கிராமத்தில் தொல்லைகாது சித்தர் வழிபட்டு ஞானம் பெற்ற சுந்தர விநாயகர் கோயிலில் புதியதாக 27 அடி உயரத்தில் சுந்தர விநாயகர் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. இந்தக் கோயிலுக்கும் துளுக்கானத்தம்மன் கோவில் பூர்ண புஷ்கலா சமேத அண்ணமார் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 29-ஆம் தேதி தேவதா அனுஞ்யை, எஜமான அனுஞ்யை, கணபதி ஹோமம் நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமத்துடன் பூஜை தொடங்கியது. 30-ஆம் தேதி கோ பூஜை, கும்பாபிஷேகம் ரிஷப பூஜை அஸ்வபூஜை, கஜ பூஜை, தனபூஜை கன்னியாஸ்திரிபூஜை, சுமங்கலி பூஜை. பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை நடந்தது. பின்னர் மொரட்டாண்டி ஆண்டி குளத்தில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று காலை 5:30 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கி கலச புறப்பாடு நடந்தது. கும்பாபிஷேகத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் துளுக்கானத்தம்மன் பரிவார தெய்வங்களுக்கு மற்றும் பூரண புஷ்கல சமேத அண்ணா கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் மொரட்டாண்டி சனி பகவான் கோயில் நிறுவனர் டாக்டர் சிவஸ்ரீ சிதம்பர சீதாராம குருக்கள், புதுக்கோட்டை புவனேஸ்வரி அவதூத்த வித்யா பீடம் பூஜ்ஜியஸ்ரீ பிரணவாந்த சுவாமிகள், திருப்பூர் பல்லடம் பிரத்தகிரி சுவாமிகள் பிரம்மஸ்ரீ சாம்பசிவரிஷீஸ்வர், பாதாள பிரத்தியங்கரா காளி கோயில் மடாதிபதி பிரம்மஸ்ரீ நடாத்தூர் ஜனார்த்தன சுவாமிகள், அங்காளபரமேஸ்வரி கோவில் பிரம்மஸ்ரீ பத்மநாப சாமிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் புதுச்சேரி மன்னாள் காவல்துறை தலைவர் சந்திரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேக ஏற்பாட்டினை மொரட்டாண்டி கிராம நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *