6 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று வாஷிங்டனில் தேசிய ஊடக மையத்தில் பேசிய அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் காணும். இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிறப்பாக உள்ளது. அது நாளுக்கு நாள் இன்னும் மேம்பட்டு வருகிறது.

அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசி வருகிறோம். நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருமித்த எண்ணம் கொண்ட நிறைய எதிர்க்கட்சிகள் கைகோத்து வருகின்றன. 2024 மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இதில் பாஜகவை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக அமையும்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி ஒரு சமிக்ஞை. இன்னும் 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளன. அதன் முடிவையும் பொறுத்திருந்து பாருங்கள். அந்த முடிவுகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்றுமொரு நல்ல சமிக்ஞையாக அமையும்.

நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் மாநிலத் தேர்தல்களில் ஒன்றோடு ஒன்று மோதித்தான் ஆக வேண்டும். இது சற்று சிக்கலான விஷயம்தான். ஆனால் சில தருணங்களில் விட்டுக்கொடுத்துப் போவது அவசிமாகிறது.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

ஊடக சுதந்திரம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “ஒரு ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் என்பது மிகமிக அவசியம். ஊடக சுதந்திரம் மட்டுமல்ல பல்வேறு கோணங்களிலும் சுதந்திரம் அவசியம். ஆனால், இப்போது இந்தியாவில் பல்வேறு அமைப்புகளும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் குரல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஒருவித அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்தேன். லட்சக்கணக்கான மக்களுடன் பேசினேன். மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.பிரதமர் மோடியின் பிரபலம் பற்றிய கேள்விக்கு, இதில் நான் உடன்படவில்லை. கேட்பதை எல்லாம் நான் நம்புவதும் இல்லை” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *