ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே 3 ரெயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி நேற்று இரவு 7 மணியளவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசாவின் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தி விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், போலீசார் என பல்வேறு மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரெயில் விபத்து நடைபெற்ற பகுதியை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று நேரில் பார்வையிட்டார். மேலும், மீட்பு பணிகளை துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *