பரபரப்பாக நடந்த பெண்கள் பிரிவில் கேரளா மின்வாரிய அணி மகுடம் சூடினர்

கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் “அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்” கோவையில் கடந்த மே 27-ம் தேதி துவங்கி இன்று (ஜுன் 1-ம் தேதி) வரை 6 நாட்கள் நடைபெற்றது. இதில் ஆடவர்கள் பிரிவில் 10 அணிகளும் மகளிர் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.

இன்று (01.06.2023) மாலை 4.15 மணிக்கு மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் ஆண்கள் பிரிவு போட்டியில் பாங்க் ஆஃப் பரோடா அணியை எதிர்த்து இந்தியன் இரயில்வே அணி விளையாடியது. இதில் இந்தியன் இரயில்வே அணி 81 – 71 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இந்தியன் இரயில்வே அணி மூன்றாவது இடத்தையும், பாங்க் ஆஃப் பரோடா அணி நான்காவது இடத்தையும் பிடித்தது.

மகளிர் பிரிவில் தென் மேற்கு இரயில்வே அணியை எதிர்த்து மேற்கு இரயில்வே அணி விளையாடியது இதில் மேற்கு இரயில்வே அணி 67 – 54 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று மேற்கு இரயில்வே அணி மூன்றாவது இடத்தையும், தென் மேற்கு இரயில்வே அணி நான்காவது இடத்தையும் பிடித்தது.

மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில் திருவனந்தபுரம் – கேரளா போலீஸ் அணியை எதிர்த்து திருவனந்தபுரம் – கேரளா மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 65 – 44 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு நடைபெற்ற ஆடவர் பிரிவில் சென்னை – வருமான வரி அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் வருமான வரி அணி 73 – 67 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வருமான வரி ஆடவர் அணிக்கு முதல் பரிசு ரூ.1,00,000.00 மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பிடித்த இந்தியன் வங்கி அணிக்கு பரிசாக ரூ.50,000.00 மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது, மூன்றாம் இடம் பிடித்த இந்தியன் இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.20,000.00 வழங்கப்பட்டது, நான்காம் இடம்பிடித்த பேங்க் ஆஃப் பரோடா ரூ.15,000.00 – மும் வழங்கப்பட்டது. மேலும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் ஃபேர் பிளே ட்ராபி மற்றும் ரூபாய் 10 ஆயிரம் இந்திய கப்பல் படை அணிக்கு வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு முதல் பரிசு ரூ.50,000.00 மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்ற கேரளா போலீஸ் அணி அணிக்கு பரிசாக ரூ.25,000.00 மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த மேற்கு இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.15,000.00 வழங்கப்பட்டது, நான்காம் இடம் பிடித்த தென் மேற்கு இரயில்வே அணிக்கு ரூ.10,000.00-மும், மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய கேரளா மாநில மின்சார வாரிய அணியை சேர்ந்த அனிஷாவுக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது. சிறந்த வீரருக்கான விருது வருமானவரி அணியின் வீரர் ஆனந்த் ராஜுவுக்கு வழங்கப்பட்டது.

இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு. பிரதாப் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் சக்தி குழுமங்களின் தலைவர் டாக்டர். எம். மாணிக்கம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் சி. ஆர். ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனருமான திரு. “ஜி. செல்வராஜ்” ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட கூடைப்ந்து கழக துணைத் தலைவர் திரு. பழனிசாமி, செயலாளர் திரு. எஸ். பாலாஜி, பொருளாளர் திரு. எம். திபாலா உட்பட நிர்;வாகிகள், நடுவர்கள், அலுவலர்கள் செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *