ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நியூயார்க்கில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்த ரெயில் விபத்து எனக்கு நினைவிருக்கிறது. ஆங்கிலேயர்களின் தவறால் ரெயில் விபத்துக்கு உள்ளானது என்று காங்கிரஸ் எழுந்து சொல்லவில்லை. காங்கிரஸ் அமைச்சர், “இது என் பொறுப்பு, நான் ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார். எனவே இதுவே எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனை, நாங்கள் சாக்குப்போக்குகளை கூறுகிறோம் , யதார்த்தத்தை ஏற்கவில்லை. நீங்கள் அவர்களிடம் (பாஜக) எதையும் கேளுங்கள், அவர்கள் திரும்பிப் பார்த்து பழியைக் கடந்து செல்வார்கள். ரயில் விபத்து (ஒடிசா) எப்படி நடந்தது என்று கேளுங்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் என்ன செய்தது என்று பேசுவார்கள் என தெரிவித்தார்.