நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநாடு தொடங்கியவுடன் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தேசிய கீதம், பாரதியார் பாடல் இசைக்கப்பட்டு மாநாடு தொடங்கப்பட்டது. மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி, துணைவேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு பேசினார். இந்த மாநாட்டில் தமிழ்மொழியில் கிடைக்காத பாடப்புத்தகங்கள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதுதவிர மாநாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் காணொலி மூலம் பங்கேற்று துணைவேந்தர்களுடன் கலந்துரையாடினார். பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தலைவர் நாகேஸ்வரராவ் மற்றும் அனுவாதினி மொழி பெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றியதுடன், துணைவேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினர். இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு வந்துவிட்டார். ஊட்டி ராஜ்பவனில் வருகிற 9-ந் தேதி வரை தங்கியிருக்கும் கவர்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, முக்கிய கோவில்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிகிறது. இதனையொட்டி ஊட்டியில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *