மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள 7 மல்யுத்த வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னணி மல்யுத்த வீரர்களும் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சத்யவர்த் காடியன், வீராங்கனைகள் சாக்சி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது பிரிஜ் பூஷன் சிங் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அனைவருக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மல்யுத்த வீரர்களுக்கு அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும், சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் கூறியிருக்கிறார். இந்நிலையில் சாக்சி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ரெயில்வேயில் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்த செய்தியுடன், போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்சி மாலிக், போராட்டத்தில் இருந்து விலகியதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவலை சாக்சி மாலிக் மறுத்துள்ளார். “நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை. போராட்டத்துடன், ரெயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன், நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்பவேண்டாம்” என சாக்சி கூறியிருக்கிறார்.
அரசு மதுவால் தொடரும் உயிர் பலியை என்ன சொல்லி சமாளிக்க போகிறீர்கள்?- அண்ணாமலை
