தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள். அவர்கள் கணக்கிட்டு எழுதும் யூனிட் அடிப்படையில் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறார்கள். இந்த நடைமுறைக்கு பதில் மின்சார பயன்பாடு அளவை மிக எளிதாக, துல்லியமாக கணக்கிட ‘ஸ்மார்ட் மீட்டர்’ இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது. தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (திங்கட் கிழமை) ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தருமபுரி உள்பட தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு 2-வது, 3-வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதில் முதல்கட்டமாக 13 மாவட்டங்களில் 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும். 2-வது கட்டமாக 1 கோடியே 2 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், 3-வது கட்டமாக சுமார் 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்படும். இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்படும் நிலையில் அடுத்த 45 நாட் களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு பள்ளியில் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்துவது கல்வி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமூக நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. நிலையான ஆசிரியர்களை அமர்த்தும்போது, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும். ஆனால், இடைக்கால ஆசிரியர்கள் பணியமர்த்தலில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்? தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *