மணிப்பூர் மாநிலத்தில் வாழும் மைதிக்கள் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 3-ந் தேதி பேரணி நடந்தது. இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து மைதிக்கள் மற்றும் குக்கி சமூகங்கள் இடையே தகராறு மூண்டு வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்கள் மாநிலம் முழுவதும் கல்வீச்சு மற்றும் வாகனங்களுக்கு தீவைத்ததில் பொது சொத்துக்கள் சேதம் அடைந்தது. வன்முறை மற்றும் கலவரத்தில் இதுவரை 98-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரம் பாதித்த பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அதிரடிப்படையினர் விரைந்து சென்று பாதிப்புக்குள்ளான மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர். மணிப்பூருக்கு மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சென்று ஆய்வு செய்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். வன்முறை நடந்து ஒரு மாதமாகியும் அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் மாநிலத்தின் பதட்டமான பகுதிகளில் இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை. பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மாநிலத்தில் பல பெட்ரோல் பங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெட்ரோல் வாங்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். திறந்திருக்கும் ஒருசில பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.200க்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோல அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து கடைகள் திறக்கப்படாததாலும், அங்கு போதுமான மருந்துகள் இல்லாததாலும் நோய் பாதித்த முதியவர்கள், குழந்தைகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு லாரிகளை மறித்து போராட்டம் நடத்தியதால் மணிப்பூர் மாநிலத்திற்குள் பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு கிலோ சாதாரண ரக அரிசியின் விலை ரூ.30-ல் இருந்து ரூ.60 ஆக அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 70 ஆகவும், ஒரு முட்டை ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. இது ஏழை மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஒருபுறம் என்றால், மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லை. இதனால் அவசரத்திற்கு கூட பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். சில பகுதிகளில் தினமும் சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பணம் எடுக்க வேறு பகுதிகளுக்கோ, அல்லது பாங்கிகளுக்கோ செல்ல முடியாமல் மக்கள் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அதோடு பல இடங்களில் இணைய வழிச்சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே இவற்றை சீரமைத்து அங்கு இயல்பு நிலை திரும்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *