எஸ். செல்வகுமார் செய்தியாளர்

தேசிய மாணவர் படை மாணவர்களின் பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம். புதுவையில் இருந்து காரைக்கால் செல்லும் 5 ஆம் நாள் பயணத்தை பூம்புகார் துறைமுகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம். முருகன் துக்கி வைத்தார்.

ஜனவரி 2024 அன்று தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகசப் பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் 5 தமிழ்நாடு தேசிய மாணவர் படை கப்பல் படை பிரிவு மற்றும் புதுவை 1 தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல்சார் பாய்மரப்படகு சாகச பயணம் 2023 ஜுன் 2 ஆம் தேதி காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகசப் பாய்மரம் படகு செலுத்தும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 302 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவுள்ள இந்த பாய்மர படகு சாகசப் பயணம் புதுவையில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடைந்து மீண்டும் அதே வழியில் திரும்புகின்றனர். இந்த கடல் சாகசத்தின் ஐந்தாம் நாள் பயணத்தை பூம்புகார் துறைமுகத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து சாகச குழுவில் பங்கேற்றுள்ள மாணவ,மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல், கடற்கரை தூய்மைப் பணித் திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

தேசிய மாணவர் படை மாணவர்களின் உள்ளத் திறன் மேம்படுவதோடு கடல் பயணம் குறித்த அச்சம் நீங்கி ஆயுதப் படையில் மாணவர்களை சேரும் எண்ணத்தை தூண்டும் பயிற்சியாக இப்பயிற்சி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் பூம்புகார் கிராம பஞ்சாயத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *