இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தன் மனைவி மற்றும் கேபினட் அமைச்சர்களுடன் 2 நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடல்வழி எல்லை பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும், பாமாயில் வர்த்தகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவூட்டும் வகையில் ஒன்றுபட்டு போராட மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் சுலாவேசி கடற்பகுதிகளில் உள்ள எல்லை நிர்ணயம் சம்பந்தமான இரு ஒப்பந்தங்கள், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்கள் குறித்து அதிபர் ஜோகோ கருத்து தெரிவிக்கையில், 18 ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கடவுள் அருளால் கடல்வழி எல்லை பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது என கூறினார். அதன்பின், இருநாட்டு அதிபர்கள் அளித்த கூட்டறிக்கையில், கையெழுத்தான இந்த ஒப்பந்தம், கடல்வழி எல்லை சார்ந்த எதிர்கால பேச்சுவார்த்தைக்கு ஒரு நல்ல அடித்தளமாக அமையும். இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மற்ற நில எல்லை பிரச்சனைகளையும் 2024 ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வரவுள்ளோம். பாமாயில் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து, வலுவாக போராட உள்ளோம். இதுசம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியம் நடுநிலையான, நியாயமான தீர்வு ஏற்பட ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தனர். காடுகளை அழித்து உருவாக்கப்படும் பண்டங்களை பயன்படுத்துதலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய பண்டங்களை இறக்குமதி செய்வதை தடைசெய்ய சட்டம் இயற்றியுள்ளது. உலக பாமாயில் வர்த்தகத்தில் 85 சதவீதம் உற்பத்தி செய்து வரும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு, இது பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதற்கு தீர்வு காண, ஒருங்கிணைந்த பிரதிநிதிக் குழுவை ஐரோப்பிய ஒன்றியத்தின் புருசெல்ஸ் நகருக்கு கடந்த வாரம் அனுப்பியுள்ளது. எனினும் ஐரோப்பாவுடன் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்தும் ஒரு வரைமுறை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என அதிபர் ஜோகோ தெரிவித்தார். மலேசியாவில் தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு வேலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்தோனேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *