வளையாத பனைகள் !
நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 140.
நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப .அவர்கள் மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள் .மதுரையில் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தது முதல் அவரை நான் மட்டுமல்ல மதுரை மக்கள் பலரும் அறிவார்கள் .எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் நல்ல உள்ளம் பெற்றவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளபனை ஓலையால் வேயப்பட்ட குடிலில் மாநாடு போல நடந்தது .மதுரை மக்கள் பலரும் வருகைதந்து சிறப்பித்தனர் .
.
நூல் ஆசிரியருக்கு இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நூல் .இவரது முதல் நூல் பலரின் பாராட்டைப் பெற்றது .10 சிறுகதைகளை மிக இயல்பாக எழுதி உள்ளார் .தேவையற்ற வர்ணனைகள் எதுவும் இல்லை .நூல் ஆசிரியர் பிறந்து வளர்ந்தது கிராமம் என்பதால் கிராமிய மொழி மிக நன்றாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .கதைகள் அனைத்தும் படிக்கும் எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளன .மனதில் பதியும்படி உள்ளன.
அரசு அதிகாரியாக பல ஆண்டுகள் பணி புரிந்து வரும் அனுபவத்தின் காரணமாக கதைகளில் அலுவலக நடைமுறைகளையும் ,சிக்கல்களையும் கதைகளில் மிக நுட்பமாக வடித்துள்ளார் .
நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களின் மனக்கண் முன் கதைகளைக் காட்சிப் படுத்தி வெற்றிபெற்றுள்ளார் .உண்மையான நிகழ்வை நேரில் பார்ப்பதுபோன்ற உண்ர்வைத் தருகின்றன .திரைப்படம் பார்ப்பதுபோன்ற உண்ர்வைத் தருகின்றன .
பரபரப்பான மதுரையின் மாநகராட்சி ஆணையாளர் என்ற பணியில் முத்திரை பதித்துக் கொண்டே சிறுகதைகளும் எழுதுவது வியப்பு .அரசு அதிகாரியாக இருந்து கொண்டே இலக்கியத்திலும் முத்திரைப் பதிக்கும் புகழ் பெற்ற எழுத்தாளர்களான முனைவர் திரு.வெ .இறையன்பு இ.ஆ .ப .,திரு.பாலகிருஷ்ணன் இ.ஆ .ப .,திருமதி. திலகவதி இ .கா .ப ., திரு. சைலேந்திர பாபு இ .கா .ப .. போன்றோர் வரிசையில் நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப .அவர்களும் இடம் பிடித்து விட்டார்கள் .
நூல் படிக்கும் வாசகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்கள் .
பத்து முத்துக் கதைகளின் தொகுப்பு நூல் இது .சாகித்திய அகதெமி விருது புகழ் பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது .ஊடகங்களின் ஆதிக்கத்தின் காரணமாக படிக்கும் வழக்கமே வழக்கொழிந்து வருகின்றது .இந்த நூல் போன்ற சிறுகதை நூல்களைப் படித்தால் இயந்திரமயமான உலகில் நம்மை ஆற்றுப்படுத்திக் கொள்ள உதவும் .நம்மை நாமே நெறிப் படுத்திக் கொள்ள உதவும் .நம்மை நாமே செதுக்கிக் படுத்திக் கொள்ள உதவும் மிக நல்ல நூல் .
.ஒவ்வொரு கதையிலும் வாசகனுக்கு ஏதாவது சொல்லும் விதமாக எழுதி உள்ளார்கள் .சிலர் கதை என்ற பெயரில் நகைச்சுவை துணுக்குகளை எழுதி வருகின்றனர் .நிகழ்வுகளையும் வர்ணனைகளையும் எழுதி பக்கம் நிரப்பி வருகின்றனர் .அவை வாசிக்கு அலுப்பைத் தரும் .ஆனால் இந்த நூல் கதைகளின் மூலம் மனிதநேயம் உணர்த்துக்கின்றார் .
வளையாத பனைகள் நூலின் தலைப்பில் உள்ள கதை எழ்மையிலும் செம்மையாக வாழும் வாழ்க்கைப் பதிவு .முதலாளி நிர்பந்தம் செய்த போதும் போதை தரும் கள் இறக்கித் தர மறுக்கும் மைக்கல் ராயப்பன் மனதில் நிற்கிறார் .அவருக்குத் துணை நிற்கும் அவரது மனைவி லூர்து மேரியும் மனதில் நிற்கிறார் .
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் விலை .
என்ற திருக்குறளை வழிமொழிந்து எழுதிய நல்ல கதை .
‘அதற்கும் இதற்கும் சரி ‘ என்ற கதையில் குடிகாரர்களால் வரும் சிரமத்தை ,எப்படி எதிர்கொள்வது என்பதையும் கற்பிக்கும் கதை .கதையின் களம் தொடர்வண்டி .படிக்கும் போது தொடர்வண்டியில் நாமே பயணிக்கும் உணர்வு வருகின்றது .இதுதான் கதை ஆசிரியர் வெற்றி .
‘
கிராமத்துக் கணக்கு ‘ கதையில் வட்டிக்கு விட்டு நாள் கணக்கில் வசூல் செய்யும் சொந்தக்காரருக்கு சாப்பிட்ட கணக்கு என்று சீட்டு கொடுப்பது நல்ல யுத்தி .அவருக்கு வந்தது புத்தி .வினை விதைத்தால் வினை அறுப்போம் என்று உணர்த்தி உள்ளார் .பணம் பெரிதல்ல மனமே பெரிது என்பதை கற்பிக்கும் கதை நன்று .
.
‘அதிகாரத்தின் எல்லை ‘ கதையில் மனிதநேயமற்ற ஆட்சித் தலைவரின் நிகழ்வின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பது தவறு .என்பதை உணர்த்தி உள்ளார் .
‘அவ்வா ‘ கதையில் நன்றாக வாழ்ந்து முடித்த பாட்டி இறந்ததும் சொத்துக்காக சண்டையிடும் உறவுகளின் குணம் எழுதி மனிதநேயம் கற்பித்துள்ளார் .
‘ அளக்கும் படலம் ‘ கதையில் அரசு ஊழியர்களின் கஷ்டத்தையும் .அரசு அதிகாரிகளின் அலட்டல்களையும் எழுதி , அரசுப் பணியில் உள்ள சிரமங்களை உணர்த்தி உள்ளார் .
‘ பாசாங்கு மனிதர்கள் ‘ கதையில் மருத்துவர்களின் மிகையான வருமானம் பற்றியும் ,விவசாயிகளின் வேதனை பற்றியும் எழுதி உள்ளார் .விவசாயம் செழிக்க வலியுறுத்தி உள்ளார் .
‘அலங்காரப் பூக்கள் ‘ கதையில் ஆடம்பரத்தை நன்கு சாடி உள்ளார் .பூங்கொத்துகள் மிக அதிக விலை கொடுத்து வாங்கி பரிசளித்து அவை குப்பைக்குச செல்லும் அவலத்தை ,வீண் விரயத்தை கண்டித்து உள்ளார் .
‘மிஷ்மாவின் மிஸ்டுகால் ‘கதையில் செல்லில் இல்லாத நபர் பற்றி தப்பாக பேசுவதை பதிந்து வைத்து பின் போட்டுக் காட்டி தோலுரிக்கும் யுத்தி நன்று .பிறரை ஏமாற்றக் கூடாது .மனம் புண் படும் படி பேசக் கூடாது .என்பதை உணர்த்தி உள்ளார் .
‘ஒளிக்கீற்று ‘ கதையில் பண்பாடு எழுதி உள்ளார் .போதைக்கு அடிமையாகும் குடிகாரர்களை கண்டித்து உள்ளார் .
இப்படி பத்து சிறு கதைகளிலும் வாசகர் மனதை பண்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக எழுதியுள்ள நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள்
—