குழந்தை வரைந்த காகிதம்!

நூல் ஆசிரியர் : கவிஞர் இளவல் ஹரிஹரன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் வளாகம்,
காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.
பக்கங்கள் : 112, விலை : ரூ.100.


 நூல் ஆசிரியர் கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்கள் பத்திரப் பதிவுத்துறையில் உயர்பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் முகநூலிலும் எழுதி வருபவர். இவருக்கு தாய்மொழி சௌராஷ்ட்ரமாக இருந்த போதும், முதல்மொழியான தமிழ்மொழியை உயிர்மொழியாகக் கொண்டு எழுதி வருபவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் பரிசு பெற்ற கவிஞர்.

 30 ஆண்டுகளுக்கு முன்பு “வெளிச்சத்தை வெளிக்கொணருவோம்” என்ற தொகுப்பு நூலில் என் கவிதையையும் இடம்பெறச் செய்து இரவி என்ற வெளிச்சத்தை வெளிக்கொண்டு வந்தவர். இந்த தொகுப்பு நூலில் நான் எழுதிய கவிதையை புதுத்தகம் பகுதியில் குமுதத்தில் வெளியிட்டனர்.

 ‘குழந்தை வரைந்த காகிதம்’ நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. முகநூலில் படித்த போதும் இந்த நூல் படித்தப் பின்பு தான் தன்முனைக் கவிதைகள் பற்றிய புரிதல் எனக்கு வந்தது. இனி நானும் எழுதுவேன்.

 சாந்தா தத் என்பவர் தமிழில் அறிமுகம் செய்து கவிச்சுடர் கா. ந. கல்யாணசுந்தரம் அவர்கள் முகநூலில் பரவலாக்கி உள்ளார். மகாகவி இதழில் வதலை பிரபா இக்கவிதைகள் பற்றிய கட்டுரை வெளியிட்டதோடு இந்த நூலையும் சிறப்பாக பதிப்பித்து உள்ளார். இனிய உதயம் இணை ஆசிரியர் கவிஞர் அரூர் தமிழ்நாடன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஹைதராபாத் சாந்தா தத் ஆகியோரின் அணிந்துரை சிறப்பு. ஹைக்கூ என்பது மூன்று வரிகள். தன்முனைக் கவிதைகள் நான்கு வரிகள். நான்கு வரிகளில் நான்கு பக்கக் கட்டுரையில் சொல்ல வேண்டிய கருத்தை சுண்டக்காய்ச்சிய பாலாக வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.

 புத்திசாலித்தனமாய் / இருப்பதாய் எண்ணி மனம்
 பைத்தியக்காரத்தனமாகவே / இருக்கிறது எப்போதும்!

உண்மை தான். தங்களைத் தாங்களே அறிவாளி என்று எண்ணிக் கொண்டு அபத்தமான செயல் செய்து சமூக வலைத்தளத்தில் நகைச்சுவைக்கு ஆளாவதை நாளும் பார்த்து சிரித்து வருகிறோம்.

 தன் அஞ்சலிச் சுவரொட்டியை
 அச்சடித்துக் கொண்டு
 அவனே படித்துப் படித்து
 அகமகிழ்கிறான்!

 சில நடிகர்களும் அரசியல்வாதிகளும் பிறர் பெயரில் ரசிகர் மன்றம் என்ற பெயரில் தாங்களே பிறந்த நாள் சுவரொட்டி அச்சடித்து ஒட்டவைத்து பார்த்து மகிழ்வது நாட்டு நடப்பாக உள்ளது. விட்டால் அஞ்சலி சுவரொட்டியும் அடித்து ரசிப்பார்கள் என்று எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை நன்று.

 அழுமுன்னர் நினைத்து / தனமேந்தி அமூதூட்டும்
 தாயவள் தான் / தனிப்பெண் தெய்வம்!

 குழந்தை அழுவதற்கு முன்பாகவே குறிப்பறிந்து பால் ஊட்டி வளர்க்கும் உலகின் ஒப்பற்ற உறவு அம்மா பற்றி வடித்த கவிதை நன்று.

 தண்ணீர் இருந்தாலும் / இல்லையென்றாலும்
 இறங்கி விடுகிறார் / வருடந்தோறும் பெருமாள்!

 வைகை ஆற்றை வறண்டு போக வைத்து விட்டனர் மணல் கொள்ளையர். வருடாவருடம் வைகை ஆற்றில் அல்ல மணலில் தான் இறங்குகின்றார் அழகர். இந்த நிகழ்வை உற்றுநோக்கி வடித்த கவிதை நன்று. 

 இருக்கும் வரை / கண்டு கொள்ளாதவர்
 இறந்தபின் தருகிறார் / அரைப்பக்க அஞ்சலி!

 தன் பெற்றோரை சரியாகப் பார்த்துக் கொள்ளாமல், கோவிலில் சிலர் தர்மம் செய்வார்கள். பெற்ற தெய்வங்களைத் தவிக்க விட்டு விட்டு மற்ற தெய்வங்களை மன்றாடிப் பயனில்லை. இறந்த பின்னர் அஞ்சலி விளம்பரம் தந்திடும் போலி மனிதர்களின் முகத்திரை கிழித்து உள்ளார். 

 இன்னும் விடவில்லை / ஆசை
 அச்சடித்த நூல்கள் / விற்காத போதும்!

 வில்லுப்பாட்டுக் கலைஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள், காந்தி மகான் கதை சொல்லும் போது ‘கோட்சே சுட்டான்’ என்று சொல்லிவிட்டு உடன் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விடுமாம். இது எப்படி என்று கேட்டபோது, வீட்டில் விற்காமல் இருக்கும் நூல்களை நினைச்சேன் உடன் கண்ணீர் வந்து விடும் என்றாராம். இன்றைய பல கவிஞர்கள் நூல் விற்காவிட்டாலும் அடுத்து நூல் வெளியிட வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்து கொண்டே இருக்கும் மனநிலையை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

 இரவு நேரம் / முகத்தில் படர்கிறது
 ஒளி வட்டம் / முகநூல் வெளிச்சம்!

 அலைபேசிக்கு அடிமையாகி இன்றைய இளைய தலைமுறை தூக்கத்தைத் தொலைத்துவிட்டு இரவு முழுவதும் விடிய விடிய முகநூலில் தவம் செய்து களைத்துவிட்டு மறுநாள் கல்விச்-சாலையிலும், பணிபுரியும் இடத்திலும் தூங்கி வழியும் நிலையை நினைவூட்டியது கவிதை. 

பெரிய திருடர்கள் / சொகுசாய் வாழ
சிறிய மனிதர்கள் / பசியால் வாடுகிறார்கள்!

உண்மை தான். கோடிகளைக் கொள்ளையடித்துச் சென்று மல்லையாவை இன்று வரை நம்மால் குறைந்தபட்சம் கைது கூட செய்ய முடியவில்லை. ஆனால் வங்கிகளின் கெடுபிடிகளால் உழவன் தற்கொலை செய்யும் அவலநிலை நாளும் அரங்கேறி வருவதை நினைவூட்டியது கவிதை.

மறக்க முடியாமல் / திணறித் தவிக்கிறது
முதுமையிலும் / முதற் காதலை!

உண்மை தான். முதல் காதல் மூளையின் ஒரு மூலையில் உடலில் மூச்சு உள்ளவரை அந்த நினைவுகள் நிலைத்து இருக்கும். உள்ளத்து உணர்வை உணர்த்தி உள்ளார் வாசகர்களுக்கு. அவரவர் முதல் காதலை அசை போட்டு பார்க்க வைத்தது இக்கவிதை.

நானும் அசை போட்டேன்

அமரரான நண்பர்களின் / அலைபேசி எண்களை
நீக்க முடியாமல் / சுழலும் நினைவலைகள்!

உண்மை தான். மறைந்தும் மறையாத தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யாவின் எண்ணை அலைபேசியில் நீக்காமலே வைத்துள்ளேன். தினசரி காலையில் அவருடன் பேசுவேன். அந்த நினைவுகள் அடிக்கடி வந்து போகின்றன.

காகிதத்தில் எழுதப்பட்ட / கடித சுகம்
தருவதில்லை ஒருபோதும் / எந்த மின்னஞ்சலும்!

கணினி வருகைக்குப்பின் மடல் எழுதும் பழக்கம் வழக்கொழிந்து விட்டது. பொங்கல் வாழ்த்து எழுதி அனுப்புவோம். அலைபேசி வருகையால் அதுவும் நின்று விட்டது. வழக்கொழிந்து விட்ட மடல் எழுதும் பழக்கத்தை நினைவூட்டி, மின்னஞ்சல் மடல் இன்பம் தருவதில்லை என்ற உண்மையையும் உணர்த்தி உள்ளார்.

சிந்திக்க வைக்கும் சிந்தனைச் சிதறல் இந்நூல் அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள்.

நூலாசிரியர் கவிஞர் இளவல் ஹரிஹரனுக்கு பாராட்டுக்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *