எஸ். செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி வட்டத்தில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வடரங்கம் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரெங்கநாதபெருமாள் கோயில் உள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த இந்த கோயிலின் ஓர் அங்கமாக இருந்து வரும் கிருஷ்ணர் கோயில் ராஜகோபுரம் வசிஷ்டர் காலத்தில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக வடரங்கம் ரங்கநாத பெருமாள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சரங்கத்தில் ஒரு ரங்கமாக வடரங்கம் இருந்து வருகிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் வடரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது மீண்டும் ஆலய திருப்பணி முடிவுற்று வெள்ளிக்கிழமை வேத பாராயணம் தொடங்கி வாஸ்து பூஜை வாஸ்து ஹோமம் நடைபெற்று முதல் கால யாக பூஜை தொடங்கியது.
தொடர்ந்து விழா அன்று காலை சங்கல்பம், பிராயசித்த ஹோமம், நாடி சந்தானம் தொடர்ந்து 4ம் கால யாக பூஜையிலிருந்து யாத்ர தானம் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று ரங்கநாத பெருமாள் ராஜகோபுரம்,விமான கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன், மற்றும் ஊழியர்கள் ஆலய அர்ச்சகர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.