கொஞ்சம் ஹைக்கூ. கொஞ்சும் சென்ரியு. நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641 001.
0422 2382614. விலை : ரூ. 45.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, ஹைக்கூவிற்கு பொருத்தமான புகைப்படங்கள் யாவும் மிக நேர்த்தியாக அச்சிட்ட விஜயா பதிப்பகத்திற்கும் அதன் உரிமையாளர் அய்யா வேலாயுதம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
சென்னை சென்ற போது இலக்கியத் தேனீ இரா. மோகன் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நூலாசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி. ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் இளவல் இவர் என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். மதுரையில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக கடைக்கு சென்ற போது கண்ணில் பட்டது இந்நூல், உடன் வாங்கி வந்து படித்து விமர்சனம் எழுதி உள்ளேன்.
ஹைக்கூ கவிதை வாசிப்பது என்பது வாசகருக்கு சுகமான அனுபவம். படைப்பாளி உணர்ந்த உணர்வை படிப்பாளிக்கும் உணர்த்துவது ஹைக்கூ கவிதையின் சிறப்பாகும். நூலாசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்கள் உணர்ந்த உணர்வை நானும் உணர்ந்தேன், நீங்களும் உணர்வீர்கள்.
ஹைக்கூ எழுதுவதும் ஒரு கலை. அக்கலை கைவரப்பெற்றால் ஹைக்கூ சிலைகள் பல உருவாகும். நூல் முழுவதும் பல சிலைகள் இருந்தாலும் மிகவும் பிடித்த சிலைகளை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். சென்னிமலை என்ற பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, பெயரோடு பிறந்த ஊரை சேர்த்துக் கொண்டமைக்கு முதல் பாராட்டு.
இந்த நூலிற்கு அழகிய அணிந்துரை வழங்கி உள்ள அமரர் பேராசிரியர் முனைவர் கவிஞர் பாலா அவர்களையும் எனக்கு மதுரையில் நடந்த இலக்கிய நிகழ்வில் அறிமுகம் செய்து வைத்தது தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் தான். கவிஞர் பாலா நல்ல பண்பாளர், நல்ல விமர்சகர், அவர் பாராட்டி இருப்பதே நூலாசிரியருக்கு பரிசு தான்.
மரக்கிளையில் தூளி
பாடுகிறாள் பாட்டு
கைகளில் நாற்று !
கிராமத்தில் நாற்று நடும் பெண்ணையும், மரத்தையும், மரத்தில் உறங்கும் தொட்டில் குழந்தையையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றது.
மழை ஓய்ந்த மாலை
புல்வெளியில் நாற்காலி
தேநீர் சுகம்!
புல்வெளியில் உள்ள இருக்கையில் அமர்ந்து தேநீர் அருந்துவது இதமோ இதம். ஹைக்கூ படிக்கும் போதே மழைநாளில் தேநீர் குடித்த நிகழ்வு நினைவிற்கு வந்து விடும். அது தான் நூலாசிரியர் படைப்பாளியின் வெற்றி.
சவ ஊர்தி ஓட்டுபவன்
மகிழ்வுந்தில் ஊர்வலம்
மாப்பிள்ளைக் கோலம்!
எள்ளல் சுவையுடன் ஹைக்கூ வடிப்பது ஒரு யுக்தி. மணமகனுக்கும் வித்தியாசமான அனுபவம் என்பதை உணர்த்துகின்றது.
வாழ்வின் நிலையாமை என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக, யாருக்கும் நிரந்தரமன்று இந்த உலகம். அதிகம் ஆட்டம் போடாதே, விரைவில் அடங்கி விடுவாய் என்பதை போதிக்கும் விதமான ஹைக்கூ இதோ!
வெட்டியான் கவலை
எவர் வருவாரோ?
தனக்கொரு குழி வெட்ட!
ஹைக்கூவில் முதல் இரண்டு வரிகள் படித்து விட்டு, மூன்றாவது வரியைப் படிக்காமல் சிந்தித்துப் பார்த்து நாமாக ஒரு விடை யூகம் செய்து விட்டு பிறகு மூன்றாவது வரி படித்தால் எள்ளல் சுவை தெரியும்.
மாமியார் மரணம்
மருமகள் அழுகை
எங்கே இருக்கும் நகைகள்?
படைப்பாளி ஒன்றை நினைத்து ஹைக்கூ வடித்து இருப்பார். ஆனால் வாசகர் மற்றொன்றை நினைத்து பொருத்திப் பார்க்கலாம் ஹைக்கூ கவிதைகளை. அந்த வகையில் இதோ ஒரு ஹைக்கூ.
மலையேறும் பக்தர்கள்
குரங்குகள் தரிசனம்
கவனம் வாழைப்பழம்!
அழகர்கோயில் செல்லும் வழியில் குரங்குகள் வாழைப்பழம் பறிப்பதைப் பார்த்து இருக்கிறேன். அது நினைவிற்கு வந்த போதும், சாமியார்களை தரிசனம் செய்யும் பக்தர்களிடம் சாமியார்கள் தட்சணை என்ற பெயரிலும், பரிகாரம் என்ற பெயரிலும் பணம் பறிக்கும் நிகழ்வோடு இந்த ஹைக்கூவைப் பொருத்திப் பார்த்தேன். அரசியல்வாதிகளோடும் பொருத்திப் பார்க்கலாம். இது தான் ஹைக்கூ கவிதையின் சிறப்பு அம்சமாகும்.
தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சித் தொடருக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள். நிம்மதியாக உறங்கப் போகும் நிம்மதியின்றி பழிக்குப்பழி வாங்கும் வக்கிரம் நிறைந்த சோகத்தை பிழிந்து கண்ணீர் வரவழைக்கின்ற தொடர்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டிப் போட்டு ஒளிபரப்பி வருகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்த முகங்களே திரும்பத் திரும்ப வந்து ஒருவித சலிப்பை ஏற்படுத்துகின்றனர். தொடரில் நடிப்பது மட்டுமன்றி அந்த நடிகர் நடிகைகளை பிற நிகழ்ச்சிகளிலும் வந்து ஒருவித எரிச்சலை ஏற்படுத்துகின்றனர். தொடரைச் சாடும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று.
உறங்கும் நேரம்
ஒப்பாரி ராகம்
தொலைக்காட்சி நாடகம்!
மரத்தை வெட்டிச் சாய்க்கும் வீணர்களுக்கு புத்திப் புகட்டும் விதமான ஹைக்கூ நன்று.
மரத்தை மரமாகப் பார்த்தால்
மரம் இருக்கும்
மரமாக.
மரத்தை விறகாக பார்க்காதே, வீணையாகவும் பார்க்காதே, மரம் மரமாகவே வாழட்டும் என்கிற சிந்தனை வலியுறுத்தும் விதமாக நன்று.
இந்தியாவில் பல கோடிகள் செலவழித்து ஏவுகணைகல் ஏவிய போதும் நாட்டில் வறுமை மட்டும் இன்னும் ஒழிந்த பாடில்லை. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான். ஏழை மேலும் ஏழையாகின்றான். வறுமையின் கொடுமை உணர்த்தும் ஹைக்கூ நன்று.
ஞானம் வேண்டாம்
சோறு வேண்டும்
காகிதம் பொறுக்கும் சிறுவன் !
தந்தை பெரியார் சொன்னது போல அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியும் சுத்தமில்லை எனபதையே மெய்ப்பித்து வருகின்றனர்.
கட்சிக் கூட்டம்
வெட்கம் தாளவில்லை
முக்காட்டுடன் பொய்.
நூலாசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.