மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறுகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்த நிலயைில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைப்பதற்காக கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் தொடங்கின.