காசியாபாத்தில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். புதுடெல்லி, முன்பெல்லாம் மாரடைப்பு என்பது 60 வயதைக் கடந்த முதியவர்கள் அல்லது இணை நோய் இருப்போருக்கு மட்டுமே ஏற்படும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இந்த நிலை இப்போது மாறிவிட்டது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் காரணமாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் திடீர் திடீரென இதுபோல மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தலைநகர் பகுதிக்கு உட்பட்ட காசியாபாத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கே ஜிம்மில் டிரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்த ஷாக் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் அங்குள்ள சரஸ்வதி விஹாரில் நேற்று நடந்தது. இதில் உயிரிழந்த அந்த நபர் சித்தார்த் குமார் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 19. ஜிம்மிற்கு சென்ற அவர் வழக்கம் போல உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டிரெட் மில்லில் அவர் ஓடிக்கொண்டு இருந்த போதே அப்படியே சரிந்தார். இந்தச் சம்பவம் ஜிம்மில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. சுமார் 18 நொடிகள் இருக்கும் அந்த வீடியோவில் அவர் டிரெட் மில்லில் நன்றாகவே ஒடிக் கொண்டிருக்கிறார். இருப்பினும், நின்ற திடீரென அவர், மெல்லச் சுயநினைவை இழக்கிறார். அதன் பிறகு சில நொடிகளில் அவர் அந்த டிரெட் மில் இயந்திரத்திலேயே சரிகிறார். அப்போது இரண்டு பேர் அங்கே ஜிம்மில் இருந்த நிலையில், இருவரும் ஒடி வந்து இந்த நபருக்கு உதவ முயல்கின்றனர். இருப்பினும், அவர்களால் சித்தார்த் குமாரை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில காலமாகவே இதுபோல திடீர் திடீரென இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருமணத்தில் நடனமாடும்போது, ஜிம்மில் ஓர்க்அவுட் செய்யும் போது, சாலையில் காத்திருக்கும் போது என திடீர் திடீரென மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.