வடிகால்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 50.
தொலைபேசி 044- 26359906.

நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி அவர்கள் உதவி கல்வி அலுவலராக இருந்து ஒய்வு பெற்றவர் .பின்னர் ஊர் மக்களால் ஊராட்சி மன்ற தலைவராக்கப்பட்டு அதையும் திறம்பட நடத்திக் காட்டியவர் .அதிர்ந்து பேசாத மென்மையான சுபாவம் என்றாலும் எடுத்ததை முடித்துக் காட்டும் நெஞ்சுறுதி துணிவு மிக்கவர் .
என்று நூலின் அணிந்துரையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் இரா .காமராசு எழுதி உள்ளார் .பதிப்பகத்தார் உரையும் மிக நன்று .நூல் ஆசிரியர் தன்னுரையில் கவிதைகள் வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடு உணர்ந்த உணர்வின் வெளிப்பாடு என்று எழுதி உள்ளார்கள். கவிதைகளைப் படித்து விட்டு நூல் ஆசிரியரை செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் .வாழ்வில் சந்தித்த சோகங்கள், அனுபவங்கள் ,கவலைகள் அதிகம் என்றார்கள் .உண்மையை கவிதையாய் வடித்ததால் கவிதைகள் படிக்க மிக நன்றாக உள்ளன .
.
சங்க காலத்தில் ஔவையார் தொடங்கி பல பெண்பாற்ப் புலவர்கள்
இருந்தார்கள் .இன்று கணினி யுகத்தில் பெண் கவிஞர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே உள்ளனர் .இவரது கவிதைகளை பொதிகை மின்னல் ,மின்னல் தமிழ்ப்பணி உள்ளிட்ட பல இதழ்களில் படித்து இருக்கிறேன் .குறிப்பாக நான் பங்குபெறும் கோவை வசந்தவாசல் கவி மன்றத்தின் தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகள் படித்து உள்ளேன் .மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி . அட்டைப்பட ஒவியம் ,வடிவமைப்பு .அச்சு ,கை அடக்கப் பதிப்பு நேர்த்தியாக உள்ளன .நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் நிறுவனத்தின் தரமான வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள்.

பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .

பீனிக்ஸ் பறவை !

கடலில் போட்டால்
தெப்பமாய் மிதப்பேன் !

புயலில் அகப்பட்டால்
சிகரத்தில் அமர்வேன் !

மண்ணில் புதைத்தால்
முளைத்துக் கிளம்புவேன் !

வெள்ளத்தில் சிக்கினால்
எதிர்நீச்சல் அடிப்பேன் !

அம்மியில் அரைத்தால்
சந்தனமாய் மணப்பெண் !

நெருப்பில் போட்டால்
தங்கமாய் மிளிர்வேன் !

சாம்பலாய் போனாலும்
உயிர்த்து எழுவேன் !

நான் ஒரு பீனிக்ஸ் பறவை !

தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து முயல வேண்டும் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார் .அவர் வாழ்க்கையிலும் தொடர்ந்து போராடி உள்ளார் .கவிதைகளின் மூலம் படிக்கும் வாசகர்களை சிந்திக்க வைப்பதுதான் நல்ல கவிதை என்பது என் கருத்து .இவரது கவிதைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன .

பக்தி எங்கே ?

நான் நாத்திகன் அல்ல
ஆனாலும்
கோயிலுக்கு போனால்
மனதில் பக்தி வர மறுக்கிறது !

அம்மன் உடம்பில்
மின்னும் ஆபரணங்கள்
நகை போடமுடியாமல்
திருமணம்
தடைப்பட்டு நிற்கும்
முதிர் கன்னிகளை
நினைவூட்டுகின்றன !

குடம் கடமை
பாலபிசேகம்
பாலின்றி செத்துப்போன
கடைசித் தம்பியை
நினைவூட்டுகிறது !

தங்கத்தால் இழைக்கப்பட்ட
கதவுகளும் சன்னல்களும்
ஒழுகும் என் குடிசையை
கண்முன் கொண்டு வருகின்றன!

நிரம்பி வழியும் உண்டியல்
வீட்டில் நிரந்தரமாய்
தங்கிப்போன வறுமையை
நினைக்க வைக்கிறது !

இப்போதெல்லாம் நான்
கோயிலுக்கு போவதில்லை !

தீண்டாமை கொடியது பாவச்செயல் என்றார் காந்தியடிகள் .ஆனால் கணினி யுகத்திலும் தீண்டாமை தொடர்வது மனித இனத்திற்கே அவமானம் .தீண்டாமை அவலம் பற்றிய கவிதை .

தீட்டு !

பிறந்த குழந்தை தீட்டு
பூப்படைந்த பெண் தீட்டு
மாதாமாதம் பெண்களுக்கு
ஏற்படும் உடற்கூறு
மாற்றங்கள் தீட்டு
மனித கழிவுகளைக்
கையால் அள்ளும்
நம் சோதரர்கள் தீட்டு
இதனையும் தீர்மானித்த
மானிடனே !

ஊழல் செய்பவன்
லஞ்சம் வாங்குபவன்
ஊரைஅடித்து
உலையில் போடுபவன்
மனிதாபிமானமற்றவன்
நடுத்தெருவில் பெண்களைத்
துகிலுரியும் காமந்தக்காரன்
இவர்களுக்கெல்லாம் ?

கடைசியில் கேள்விக்குறியோடு முடித்துள்ளார் கவிதையை . கவிஞர் பொன் .கண்ணகி அவர்கள் சிலப்பதிகார கண்ணகி போல அநீதி கொண்டு கொதித்து கவிதை வடித்துள்ளார்கள் .

பறப்பேன் !

பறப்பேன் பறக்க
முயற்சிக்கும் போதெல்லாம்
சிறகுகள் முறிக்கபட்டாலும்
முயற்சியை
நிறுத்த மாட்டேன்
முயன்று பறப்பேன் !
முடியும் வரை முயலுவதல்ல எடுத்த செயல் முடியும் வரை
முயலுவதே வெற்றி .என்பதை உணர்த்துகின்றது .

நகைச்சுவை நடிகர் சிறந்த சிந்தனையாளர் என் .எஸ் .கிருஷ்ணன் பாணியில் உள்ள கவிதை மிக நன்று .

காலம் மாறிப்போச்சு !

கலையில் எழுந்து
நீராகாரம் குடிச்ச
காலம் மாறிப்போச்சு !

பல்லு விளக்காம
காபி குடிக்கும்
மாற்றம் வந்தாச்சு !

கல்லூரியில் கூட
பேராசிரியர்க்குப் பயந்த
காலம் மாறிப்போச்சு !

ஆரம்பபள்ளியில்
ஆசிரியர் அதட்டும்
மாற்றம் வந்தாச்சு !

மாற்றம் நல்ல மாற்றமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் விதமாக கவிதை வடித்துள்ளார் .

ஒரே வீட்டில் வாழ்ந்தபோதும் மனம் ஒட்டாமல் ஏனோ தானோ என்று வாழும் இணைகள் பெருகி விட்ட காலம் இது .அதனை உணர்த்தும் கவிதை நன்று .

இடைவெளி !
காலத்தின் கட்டாயம்
ஒரே வீட்டில்
அடைந்து கிடக்கிறோம்
மனங்களுக்கு
இடையிலான
இடைவெளியோ
பலகாத தூரம் !

மொத்தத்தில் நூல் முழுவதும் சிந்தனை விதைக்கும் நல்ல கவிதைகள் உள்ளன .நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *