எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பால் படுகை கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றயத்துக்கு உட்பட்ட பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் இருந்த காசி திட்டு, கொண்டையான் திட்டு கிராமங்கள் ஆற்றில் மூழ்கிய நிலையில் தற்போது சந்தப்படுகை, திட்டுப்படுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு கிராமங்கள் உள்ளன.

நாதல படுகை, முதலை மேடு திட்டு கிராமங்களில் வசித்து வரும் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவில் பணப்பயிர்கள், காய்கறி மற்றும் பூச்செடிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மழை காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தினால் படுகை கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகள், விவசாய விளை நிலங்கள் ஆற்றுடன் அடித்து செல்லப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பை தடுப்பதற்கு படுகை கிராமங்களை ஒட்டிய பகுதியில் கருங்கற்களைக் கொட்டியும், கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைத்தும் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று ஆற்றினால் ஏற்படும் மண் அரிப்பை தடுப்பது மற்றும் அடிப்படை வசதிகளை அரசிடம் கேட்டு பெறுவது குறித்து நாதல் படுகை கிராமத்தில் பாமக (அன்புமணி அணி ) மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பாமக குழுவினர் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி நாதல் படுகை, முதலை மேடு திட்டுப் பகுதியில் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு வெள்ளத்தைத் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகள் பெருமளவில் ஆற்றுடன் சென்று விட்டன.

நாதல்படுகை, முதலை மேடு திட்டு கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பல நூறு ஆண்டுகளாக அப்பகுதியில் விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றனர். இங்கு உயர்நிலைப்பள்ளி, அரசு அலுவலகங்கள், நியாயவிலை கடை உள்ளன.

ஆனால் அரசின் மெத்தன போக்கால் 500 மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டு ஆறு உள் வந்துள்ளது. வரும் மழைக்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கிராமங்கள் முற்றிலுமாக காணாமல் போகும் நிலை உள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இங்குள்ளவர்கள் விவசாய நிலங்களில் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வரும் பாவப்பட்ட மக்கள். உடனடியாக மண் அரிப்பை தடுக்க கருங்கற்களைக் கொட்டி மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணுக்கு முன் கிராமம் அழிந்து வருவது மிகக் கொடுமையானது. விவசாய விளை நிலங்கள், குடியிருப்புகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது.

அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாமக தலைவரை கலந்தாலோசித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பெரும் போராட்டம் நடத்தப்படும். மேலும் இங்கு சாலை வசதிகள் இல்லை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், குடியிருப்புகள் ஆற்றில் அடித்துச் சென்று செல்லப்பட்டது. கடந்த வெள்ள காலத்தில் மட்டும் 11 வீடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அரசு இங்கு வாழ்பவர்களையும் மனிதர்களாக மதித்து மரியாதை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்பகுதி மக்கள் மரியாதையை ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்படும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *