அடிப்படைவசதி கோரி குமாரபுரத்தில் நூதனபோராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள பாப்புரெட்டியாபட்டி ஊராட்சி டி.குமராபுரம் கிராமத்தில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேறும் சகதியுமான ரோட்டில் தேங்கிய தண்ணீரில் நீச்சல் அடித்து குளித்து நுாதன போராட்டத்தை மக்கள் நடத்தினர்.
டி.குமராபுரம் கிராமத்தில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இன்றி தனித் தீவாக மாறி உள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் சேதமடைந்து குண்டும் குழியுமான ரோட்டில் பள்ளம் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இங்கு 2 கி.மீ.,க்கு ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இதனை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டி வித்தியாசமான முறையில் இரண்டு முதியவர்கள் தண்ணீர் நிரம்பிய சேதமடைந்த சாலையின் மத்தியில் அமர்ந்து குளித்தனர்.
இதனை வீடியோவாக அப்பகுதி இளைஞர்கள் வெளியிட்டு பரப்பினர்.
டி.குமாரபுரம் பொதுமக்கள் இதுகுறித்து கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த தார் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்காமல் நெடுஞ்சாலை துறையினர் விட்டுள்ளனர்.
இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கிராமத்திற்கு வர மறுக்கின்றனர். இரவு நேரங்களில் மின்கம்பங்கள் லைட் மாற்றாமல் இருள் சூழ்ந்துள்ளது.
அடிப்படை தேவையான ரோடு, தெருவிளக்கு வசதி கூட மறுக்கப்படுகிறது ஆகையால் மாவட்ட நிர்வாகம் தூரித நடவடிகை எடுத்து அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றனர்.