எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர்
சீர்காழி அருகே கார்குடி கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதியின்றி தவிக்கும் கிராமமக்கள்.மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி இடிந்து பழுதானதால் போர்வெல் மோட்டாரில் ஆபத்தை உணராமல் தண்ணீர் பிடிக்கும் அவலம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையாம்புத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது கார்குடி கிராமம். ஓலையாம்புத்தூர் ஊராட்சியில் இருக்கும் இக்கிராமத்திற்கு அகணி ஊராட்சியில் இருந்துதான் செல்ல வேண்டும். 60 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இக்கிராமத்தில் கடந்த. 5 ஆண்டுகளாக சாலை பழுதடைந்து ஜல்லி கற்களாக காட்சியளிக்கிறது.
கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் பாலம் பழுதடைந்ததால் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்ப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் போதிய பராமரிப்பு இல்லாமல் உட்புறம் சிதைந்து தொட்டியின் உள்ளேயே இடிந்து விழுந்துள்ளது.
அதனை பயன்படுத்த முடியாததால் அதற்கான போர்வெல் மின் மோட்டாரை இயக்கி ஆபத்தான முறையில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். அடிபம்பு, குடிநீர் குழாய் என நீர் ஆதார அமைப்புகள் முற்றிலும் பயனற்று கிடக்கிறது.
கிராமத்தின் சாலை பழுது மற்றும் தெருவிளக்குகள் கூட இல்லாததால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் கிராமமக்கள் வரை பலர் சாலையில் விழுந்து காயமடைந்து வருகின்றர்.
ஊராட்சியில் இருந்து விலகி தனித்து விப்பட்ட கிராமம் போல் உள்ளதால் ஊராட்சி சார்பாக தங்களுக்கு எவ்வித வசதியுமே செய்து தரவில்லை எனவும் கிராமமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.புதிய குடிநீர் தொட்டி அமைத்து சாலையை புதுப்பிக்க வேண்டும் என காருகுடி கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.