திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் துவக்க விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் பாலச்சந்தர் அனைவரையும் வரவேற்றார். இரண்டாம் ஆண்டை சார்ந்த சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளை சார்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கல்லூரியின் முதல்வர் ஜான் லூயிஸ் மற்றும் முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் பேசினர். கல்லூரியின் சிறப்பம்சங்கள் அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்கள், குறிப்பாக இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் மூலம் 25 நாட்களுக்கு கிடைக்கப்பெறும் இன்டர்ன்ஷிப் பயிற்சி குறித்த திட்டங்கள், போட்டித் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் ஆகியவற்றை முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் பேசுகையில் எடுத்துரைத்தார்.
கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் பேசுகையில், மாணவர்கள் என் எஸ் எஸ் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளில் பங்கேற்று சிறப்பித்து வருவதையே பாராட்டியும், முக்கியமாக கோயிலுக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்த இடம் கல்லூரி என்றும், மாணவரை மனிதனாக மாற்றும் இடம் என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இதில் மாணவர்களில் வாரிய தேர்வில் முதல் மதிப்பெண் மற்றும் வருகை பதிவேட்டில் 100% வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர் கணிப்பொறியியல் துறை பேராசிரியை அனிதா தொகுத்து வழங்கினார். அனைத்து துறை தலைவர்கள், வகுப்பு ஆசிரியர்கள் சப்போர்ட்டிங் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.