சத்தியமங்கலம் , ஏப்.01- தாளவாடி அருகே மர்மமான முறையில் ஆண் சிறுத்தை உயிரிழப்பு மோப்ப நாய் உதவியுடன் வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை வெப்பம் காரணமாக தண்ணீர் தேடி பகல் நேரங்களிலேயே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.

சிறுத்தை உயிரிழந்து கிடப்பது பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற தாளவாடி ரேஞ்சர் சதீஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தை உறுதி செய்தனர்.

பின்பு ஆசனூர் டிஎப்ஓ சுதாகர் முன்னிலையில் சத்தி புலிகள் காப்பகத்தின் வன உதவி கால்நடை டாக்டர் சதாசிவம், தாளவாடி உதவி கால்நடை டாக்டர் ஜனனி மற்றும் சூசையபுரம் உதவி கால்நடை டாக்டர் பிரபுகுமார் ஆகியோரால் பிற்பகல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் போது தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் சார்பாக டிராப்பிக் இந்தியா ஒருங்கிணைப்பாளர் பாலாஜி சேசன், தலைமை வன உயிரின காப்பாளரின் சார்பாக தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர் மாதேஸ் குமார், இக்கலூர் கிராம வனக்குழு தலைவர் மரூர் கிராம வனக்குழு பொருளாளர் ஆகியோர்களுடன் தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பரிசோதனையில் சிவத்தையின் உடலில் வெளிப்புறமாக எவ்வித காயங்களோ, மின்சாரம் தாக்கி இறந்ததற்கான அறிகுறிகளோ ஏதும் இல்லாததால், கேர்மாளம் வனச்சரத்திலிருந்து மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. சிறுத்தை இறந்தற்கான காரணத்தை கண்டறிய இறந்த சிறுத்தையின் உடல் பாகங்களிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப்க்கு அனுப்பட்டுள்ளதாகவும் ரிசல்ட் வந்தவுடன் காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *