பெரம்பலூர் மாவட்டம்
மண்வளம் காத்து அதிக மகசூல் பெற விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் – வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அ.கீதா அவர்கள் தகவல்.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளதாவது –
விளைநிலங்களின் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திரவ உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை நிலைநிறுத்தி நிலையான உணவு உற்பத்தியைப் பெற முடியும். விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களின் மண்வளத்தை பாதுகாக்கவும, அதிக மகசூல் மூலம் கூடுதல் வருமானம் பெறவும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். இரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயிர்களுக்கு இடுவதால் மண்ணின் தன்மை மாறுபாடைந்து மண்வளம் குன்றுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து வருகிறது.
இதனை தவிர்க்க உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள உயிரியியல் செயல்பாட்டை அதிகப்படுத்தி மண்வளத்தை பாதுகாப்பதன் மூலம் நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழிவகுக்கலாம். அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் நுண்ணுயிரிகள் காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை மண்ணின் நிலைப்படுத்தி, தழைச்சத்தாக மாற்றி வளரும் பயிருக்கு வளமூட்டுகிறது. பாஸ்போபாக்டீரியா மண்ணில் கிட்டா நிலையிலுள்ள மணிசத்தினை கரைத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது. பொட்டாஷ் பாக்டீரியா மண்ணில் உள்ள சாம்பல் சத்தை பிரித்து பயிர்களுக்கு தருகிறது. மேலும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இரசாயன உரங்களின் பயன்பாட்டை 25 சதவீதம் வரை குறைக்கலாம்.
இதன் மூலம் நிகர சாகுபடி செலவையும் குறைக்கலாம், திரவ உயிர் உரங்கள் பயிரின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதுடன் பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் உற்பத்தி செய்து பயிர் வளர்ச்சியை துரிதபடுத்துகின்றன. பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் ஆற்றலையும் பெறுகின்றன. இதன் மூலம் 15 முதல் 20% வரை பயிரின் மகசூல் அதிகரிக்கிறது. இரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் மாசடைவதும் குறைகிறது. இரசாயன உரங்களின் இறக்குமதி குறைவதால் நாட்டின் அந்நிய செலவாணி மிச்சமாகிறது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல் மற்றும் இதரப் பயிர் வகைகளுக்கு அசோஸ்பைரில்லமும் பயறு வகை மற்றும் நிலக்கடைலைகளுக்கு ரைசோபியமும் அனைத்து பயிர்களுக்கும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை ஒருங்கே பயிர்களுக்கு வழங்கக்கூடிய அசோபாஸ் மற்றும் சாம்பல் சத்தை பயிர்களுக்கு வழங்கும் திரவ பொட்டாஷ் பாக்டீரியா என ஏழு வகையான திரவ உயிர் உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது, உயிர் உரங்களை இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்கக்கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய வெப்பம் படாமல் பாதுகாத்து வைக்க வேண்டும். விதைகளை பூஞ்சாண கொல்லியுடன் விதை நேர்த்தி செய்து பின்பு கடைசியாக உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இத்திட திரவ உயிர் உரங்கள் 500 மில்லி அளவுள்ள கொள்கலன் ஒன்றின் விலை ரூபாய் 150/- ஆகும். எனவே விவசாயிகள் திட திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளம் காத்து அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *