தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் துறையின் சார்பில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட தடுப்புப் படைக்குழு உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து மற்றும் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக்கூடாது.

அவ்வாறு பணியமர்த்தினால் அபராதமோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை எவரேனும் பணியமர்த்தியிருந்தால் அது குறித்த விவரத்தினை குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 என்ற எண்ணிற்கு அல்லது தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு 0461-2340443 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாராக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.


முன்னதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படைக்குழு உறுப்பினர்களுக்கான இணைய வழி பயிற்சி நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) மற்றும் குழந்தைத் தொழிலாளர் மீட்பு நடவடிக்கைகளை பயனுள்ள முறையில் செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமான ஜூன் 12 உடன் இணைத்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், தொழிலாளர் துறை உதவி ஆணையர் மின்னல்கொடி மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படைக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *