தேசிய அளவிலான வூசு போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்திய தமிழக அணியில் விளையாடிய கோவை வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..
கர்நாடகா மாநிலம்,பாகல்கோட் பகுதியில் கேலோ இந்தியா பெண்களுக்கான வூசு போட்டிகள் கடந்த 10 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற இதில்,மகாராஷ்டிரா,பஞ்சாப்,உத்தரப் பிரதேசம்,கேரளா,கர்நாடாகா,ஆந்திரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.சப் ஜூனியர்,ஜீனியர்,சீனியர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இதில், தமிழ்நாடு அணிசார்பாக,கோவை,வேலூர்,சேலம்,திண்டுக்கல்,சென்னை,தஞ்சை,திருவள்ளூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பள்ளி,கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்..
சான்சூ,டாவ்லூ ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் கோவையை சேர்ந்த வீராங்கனைகள் ஆறு தங்கம்,ஒரு வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.அதே போல ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழக அணி வென்றுள்ளது.இதற்கு தமிழ்நாடு வூசு விளையாட்டு சங்க தலைவர் அலெக்ஸ் அப்பாவு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவை இரயில் நிலையம் திரும்பிய தமிழ்நாடு வூசு விளையாட்டு சங்கத்தின் செயலாளர் ஜான்சன் மற்றும் கோவை வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.இதில் கோவை மாவட்ட வூசு சங்கத்தின் தலைவர் கணேசன் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முத்து ராஜ பாரதி,முத்தகிழ் அரசு,ஆஷிக் ஆகியோருக்கு பூச்செண்டுகள் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்..