வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயம் அருகே உள்ள வேகத்தடைகள் மீது இரவில் ஒளிரும் ஒளி வில்லைகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயம் பகுதியில் கும்பகோணம், மன்னார்குடி சாலையில் அருகே மூன்று வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடைகள் மீது வெள்ளை கோடுகள் இல்லாததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் நெடுஞ்சாலை த்துறை பராமரிப்பில் உள்ள சாலையில் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் அருகே இரண்டு வேகத்தடைகள் உள்ளது. “இங்கே வேகத்தடை உள்ளது மெதுவாக செல்லவும்”என நெடுஞ்சாலைத் துறையினர் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கவில்லை. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வேகத்தடைகள் மீது அடிக்கப்பட்ட வெள்ளை நிற கோடுகள் மங்கிய நிலையில், அங்கு வேகத்தடை இருப்பதை வெளி ஊர்களில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனிக்க மறந்து அடிக்கடி சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.
அதேபோன்று வலங்கைமான்- பாபநாசம் சாலையில் விருப்பாச்சிபுரம் கடைவீதி பகுதியில் உள்ள வேகத்தடையிலும் வெள்ளை வர்ணங்கள் பூச வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ணம் பூசுதல், இரவில் ஒளிரும் ஒளி வில்லைகள் அமைத்தல், வேகத்தடை உள்ளது
என்ற அறிவிப்பு பலகை வைத்தல் போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.