ஸ்ரீரங்கம் என்றால் ரங்கநாதர் கோவில் ஞாபகம் வருவது போல திருச்சி மக்களுக்கு காவிரி பாலமும் நினைவில் இருந்து நீக்க முடியாத ஒன்று. தற்போது மக்கள் பயன்பாட்டில் இருக்கும் காவிரி பாலம் ஆனது 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. திருச்சி மாநகராட்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் இருந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக புதிய பாலமானது கட்டப்பட்டது.

இதனிடையே திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் இடையே வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் அனைத்தும் மேற்கொண்டு அரசுக்கு ஆய்வறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த புதிய பாலம் தற்போதுள்ள பாலத்துக்கு மேற்கு பகுதியில் திருச்சி மேலசிந்தாமணியிலிருந்து மாம்பழச்சாலை வரை 545 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதையுடன் சேர்த்து 17.75 மீட்டர் அகலத்தில் நான்கு வழித்தடங்களாக அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது புதிய பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக காவிரி ஆற்றின் கரைக்கு கட்டுமான தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்காக கரையோரம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது .

அரசு சார்பில் சுமார் 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டுமானத்துக்கு 68 கோடி ரூபாயும் நில கையகப்படுத்தும் பணிக்கு சுமார் 30 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர அணுகுசாலைகள் அமைக்கும் பணிகள், ரவுண்டானா கட்டுமான பணிகள், பாலத்தில் மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளை மாற்றுதல் ஆகியவற்றிற்கு மீதித் தொகை செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டுமான பணிகள் இரண்டு வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *