திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர்ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 7-ஆம் தேதி முதல் யாக பூஜைகள் தொடங்கி 8-ஆம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையும், அதனைத் தொடர்ந்து 9-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 10-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கி நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்று,
திருக்கயிலாய பரம்பரை யபவேத சந்தானம் கந்த மரபு சூரியனார் கோயில் ஆதீனம், ஸ்ரீ சிவச்சீர யோகிகள் மடாலயம் 28வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை நாகப்பட்டினம் இணை ஆணையர் வே. குமரேசன் அவர்களின் உத்தரவின்படி, திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் ( கூ. பொ) க. ராமு வழிகாட்டுதலின்படி, வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலய செயல் அலுவலர் அ.ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு காலை 9:15 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகமும், காலை 10 :15 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடைபெற்று தீபாராதனை, அருட்பிரசாதம், அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.
யாகசாலை பூஜைகளை திப்புராஜபுரம் சர்வசாதகம் சிவ ஆகம திலகம் என். சுவாமிநாத சிவாச்சாரியார் சிறப்பாக செய்திருந்தார். நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியை வலங்கைமான் மணிமாறன் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்,
பாதுகாப்பு பணியில் வலங்கைமான் போலீசார் சிறப்பாக செயல்பட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், இரவு8:30 மணிக்கு சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆலய ஆய்வாளர் க. மும்மூர்த்தி, பரம்பரை அறங்காவலர் விருப்பாச்சிபுரம் ஏ.குமார் குருக்கள் மற்றும் திருப்பணி குழுவினர், விருப்பாச்சிபுரம் & சின்னகரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.