திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மாணிக்கமங்கலம் ஊராட்சி சிவபுரி கல்விக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை முன்னிட்டு கடந்த ஜூலை 19ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்தில் சரி செய்வதாக அரசு அளித்த உத்தரவுப்படி இது நாள் வரை நடைமுறைப் படுத்தாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் கும்பகோணம் – மன்னார்குடி சாலையில், வலங்கைமான் அருகே உள்ள நரிக்குடியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வேலவன் கோரிக்கையை விளக்கி கண்டன உரையாற்றினார்.
சிபிஎம் ஒன்றிய செயலாளர் இராதா, மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் ரஷ்யா பேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள போரின் ஆழத்தை அதிகரித்து, மினி டேங்க் அமைத்து தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைக்க உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும். ராமப்பா தோட்டம் பகுதியில் வறட்சி நிவாரண நிதியில் இருந்து புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மாணிக்கமங்கலம் ஊராட்சி சிவபுரி கல்விக்குடிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து, புதிய மேல்நிலை நீர் தொட்டி அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டதை முன்னிட்டு தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் நிறைவு பெற்றது. சாலை மறியல் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.