புதுச்சேரிக்கு தனி மாநில அன்தஸ்தை எதிர்த்து இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசு தலைவருக்கு கோரிக்கை.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது…
புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கு கூடுதல் உரிமை, அதிகாரம் மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் லஞ்சம், ஊழல், காலதாமதம், அலைக்கழிப்பு, மன உளைச்சல் இல்லாமல் அரசு துறைகளில் இருந்து பொதுமக்கள் உடனுக்குடன் பயன் அடைய “சேவை பெறும் உரிமை சட்டம்” ஒன்றை புதுதில்லி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டது போல புதுச்சேரி சட்ட பேரவையில் நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் கூடுதல் அதிகாரம் கேட்டு தனி மாநில அந்தஸ்துக்கான தீர்மானம் ஒருதலைபட்டசமாக, பாரபட்சமாக, ஓரவஞ்சனையாக நிறைவேற்றப்பட்டதால் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மக்கள் நலன் கருதி பாரத பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசு தலைவர் ஆகியோர் தற்போதைய நிலையான யூனியன் பிரதேச அந்தஸ்து தொடர செய்ய வேண்டும்.
யாருடைய சுய நலத்திற்காக தனி மாநில அந்தஸ்து தீர்மானம் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசு தலைவர் ஆகியோர் உணர வேண்டும்.
மேலும், 33 சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் 6 அமைச்சர்களுக்கு ஆகும் மொத்த செலவு எவ்வளவு ? சட்ட பேரவை நடவடிக்கைகளுக்கு ஆகும் மொத்த செலவு எவ்வளவு? அதனால் மக்களுக்கு பயன் என்ன ? என்று பொருளியல் ஆய்வு நடத்தி நிதி செலவீன அறிக்கையை மக்கள் நலன் கருதி மத்திய நிதி அமைச்சர் வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும். மேலும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் , சட்ட பேரவைக்கும் செலவாகவும் நிதியை முறையே பயன்படுத்தி நேரடியாக மக்களுக்கு நன்மை செய்யலாம். அதற்கு பல நல்ல உதாரணங்கள் இருக்கின்றன.
சட்ட மன்றம் இல்லாமல் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வரும் அந்தமான் நிக்கோபார், சண்டிகர், டாட்ரா நகர் ஹவேலி, லக்ஷதீப், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற யூனியன் பிரதேசங்களை போல புதுச்சேரிக்கு அந்தஸ்து வழங்கி, பல ஆயிரம் கோடி ரூபாய் கடன், பல நூறு கோடி ரூபாய் வட்டி கட்டி நலிந்து போன, நிதி அரன் மற்றும் செலவீன நெறி அறியாத புதுச்சேரி சட்ட பேரவைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய ஒன்றிய அரசு உத்தரவிட்டு பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தை அடித்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் உறுதி செய்யும் வகையில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கைகள் எடுத்து, உள்ளாட்சி துறைக்கான இந்திய ஒன்றிய அரசின் பெரும் நிதியை புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கு உள்ளாட்சி வழியாக கிடைக்க பெற இந்திய ஒன்றிய அரசு உடனே ஆவன செய்ய வேண்டும். உள்ளாட்சிக்கு எதிரான வழக்குகள் உள்நோக்கம் உள்ளவை என்று நீதிமன்றங்களுக்கு எடுத்துரைத்து புதுச்சேரியில் மக்களாட்சியை நிலைநாட்ட பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசு தலைவர் ஆகியோர் புதுச்சேரி மீது அக்கரை இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் தேவை இல்லையாம், ஆனால் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டுமாம் ! அது ஜனநாயகம் அற்ற தீர்மானம். அதிகார துஷ்பிரயோகம் அது.
முதலமைச்சர் அப்பழுக்கற்றவர் என்றால் ரெஸ்டோ பார்கள் குறித்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தயாரா? அமைச்சர் ஒருவரே துணைநிலை ஆளுநரிடம் புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அமைச்சரின் இலாகா ஒன்று பறிக்கப்பட்டு அவர் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஊழல் குறித்து புகார் தெரிவித்தவரை பாதிப்பது அரசாங்கம் அல்ல. அது தீவிரவாதம்.
புண்ணிய பூமியான புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் மதுபான கடைகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலால் காவலருகே பாதுகாப்பு இல்ல, விபச்சாரத்தால் குழந்தைகள் கொலை, வாரம் தோறும் கொலைகள், தினந்தோறும் கொள்ளை, திருட்டு, பெருகிவரும் நில அபகரிப்பு, பாலியல் மற்றும் சைபர் குற்றங்கள். ஆன்மீக பூமியான புதுச்சேரி வெகுவாக சீரழிந்து வருகிறது. எதற்கு இந்த சட்ட பேரவை? என்று மக்கள் மனதில் விரக்தி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியின் தற்போதைய ஆட்சி ஊழலில் திகைத்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மூடி மறைத்து, சிறப்பான நல்லாட்சி நடத்துவது போலான வெற்று பிம்பத்தை உருவாக்கி, மண் குதிரை மேல் பந்தயம் வைப்பது போல எதிர் வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதை பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசு தலைவர் ஆகியோர் ஆழ்ந்து ஆய்வு செய்து ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி மக்கள் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை விரும்புகிறார்கள். ஓட்டுக்கு ரூபாய் 500 கொடுத்தும் படுதோல்வியை தழுவியதை பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசு தலைவர் நினைத்து அவர்களது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் நல்லாட்சி வேண்டும்.
இவ்வாறு, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசு தலைவர் ஆகியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.