இரா.மோகன் தரங்கம்பாடி செய்தியாளர்
கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மயிலாடுதுறையிலிருந்து சென்ற நிவாரண பொருட்கள்,சமூக சேவகர் பாரதிமோகன் ஏற்பாட்டில் ரூபாய் 3 லட்சம் மதிப்பில் 400 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்திய கிராமமக்கள்.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் கடந்த ஜூலை 30-ம் தேதியன்று முண்டக்கல், சூரல்மலை ஆகிய இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். கிராமங்கள் நிலச்சரிவில் புதைந்து போயின. இதில் 400 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தங்களது குடும்பம் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த
நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட போது மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று ஐந்து நாட்கள் தங்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தங்களால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என் கருதி நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நிவாரண பொருட்களை சேகரித்தனர்.400 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரிசி , எண்ணெய் , பருப்பு உட்பட அனைத்து வகை மளிகை பொருட்கள் மற்றும் புதிய வேஷ்டி, சட்டை,புடவை,கைலி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதி மக்களுக்கு மினி லாரியில் அனுப்பிவைக்கப்பட்டது.
முன்னதாக பெரம்பூர் கடைவீதியில் சமூக ஆர்வலர் பாரதி மோகன் அறக்கட்டளை குழுவினர் மற்றும் கிராமமக்கள் இணைந்து வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து மௌன அஞ்சலி செலுத்தினர்.