திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி இன்று (20/09/2024) தஞ்சாவூர் குருதயாள் சர்மா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த போட்டியினை திமுக சட்டத்துறை அணி இணைச்செயலாளர் கே.எஸ்.இரவிச்சந்திரன் (முன்னாள் எம்எல்ஏ) தொகுத்து வழங்கினார்.
வினாடி வினா போட்டி, 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தஞ்சாவூர் மண்டலத்தில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த முதல் சுற்று இணையவழி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர். 18 வயதுக்குட்பட்ட பிரிவில் மயிலாடுதுறை அணி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (பொதுப் பிரிவு) திருவாரூர் அணி வெற்றிபெற்றது.
தமிழ் மொழி, இலக்கியம், திராவிட வரலாறு, கலைஞர் ஆற்றிய பணிகள் குறித்து வினாடி வினா கேள்விகளுக்கு ஆர்வத்துடன் போட்டியாளர்கள் பதில் அளித்தனர். இந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு அமைச்சரவைதான் ஒப்புதல் அளித்துள்ளது, நாடு ஒப்புதல் அளிக்கவில்லை. இதில் முதல்வரின் நிலைப்பாடு என்ன என்பது உங்களுக்குத் தெரியும் நிச்சயம் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்தையும் ஒரே நாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்தால் மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வருடம் முடியாத அரசின் நிலை என்ன? ஒரே தேர்தலால் மக்களுக்கு வரும் பயன் என்ன? என எதுவுமே இல்லாமல் அவர்களுக்கு லாபம் தரக்கூடிய ஒன்று என எதை நினைக்கின்றனரோ, அதனைச் செய்து விட நினைக்கின்றனர். அவர்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து மக்கள் மீது திணிக்க வேண்டும் என்று தான் என்னுகிறார்கள். ஜனநாயகத்திற்கும், மாநிலங்களுடைய உரிமைகளுக்கும் எதிராக இருக்கக்கூடிய எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், தஞ்சாவூர் மாநகர்ச்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திமுக மாநில மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், திமுக மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப. ராணி, திமுக மகளிர் அணி இணைச்செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ, மாநில மகளிர் அணி நிர்வாகிகள், மாநில தொண்டர் அணி நிர்வாகிகள், மாவட்ட மாவட்ட அணி நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த வினாடி வினா போட்டியை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது X தளத்தின் வாயிலாகத் தொடங்கி வைத்தார். ‘kalaingar100.co.in’ என்ற இணையதளத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று (கடந்த ஆண்டு) இணையவழி போட்டிகள் தொடங்கியது. முதல் சுற்று இணையவழி வினாடி வினா செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கி அக்டோபர் 25, 2023 வரை நடைபெற்றது.18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி மற்றும் 18 வயதிற்குப்பட்டோருக்கான போட்டிகளாக இரு பிரிவுகளாக நடைபெறும்.
இரண்டாவது சுற்று மண்டல போட்டி 12 மாவட்டத்தில் நடைபெறுகிறது. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தர்மபுரி, ராணிப்பேட்டை, ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை, திருச்சி ஆகிய மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி முடிவடைந்தது. மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெறவுள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சமும், 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சமும், 3ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குத் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குகிறார்.