ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் (SRIOR), உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் பிரத்யேக இணையதளம் மூலம் SRIOR தொடங்கியுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர்.குகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர் முன்னிலையில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித், தொடங்கி வைத்தார்.
2024 உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் கருப்பொருளான “மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக்கூடாது” என்ற செய்தியுடன் ஒன்றாக அமையும்படி SRIORன் டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரம் அமைந்தது.
இந்த பிரச்சாரம் மூலம் சமுதாயத்தில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியை எடுக்க, மக்கள் https://mhits.in/SRIOR/breast_cancer_2024/ என்ற இணையதளத்திற்கு அல்லது இதற்கான பிரத்தியேக QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர்.குகன் கூறுகையில், தாமதமாக திருமணம் செய்து கொள்வது, கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்வது, புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் நகர்புற பெண்கள் அதிக அளவில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக கூறினார். இந்தியாவில் 50 சதவீதம் மார்பக புற்று நோய்கள் புற்றுநோய் மேம்பட்ட நிலைகளில் (நிலை 3 அல்லது 4) கண்டுபிடிக்கப்படுகிறது என்றும் இந்த நிலையில் (நிலை 3 அல்லது 4) புற்றுநோய் கண்டறியப்பட்டால், 45 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை மட்டுமே நோயாளியை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார். முறையாக உடற்பயிற்சி செய்வது, மதுப்பழக்கத்தை கைவிடுவது, கீரைகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும் என்றும் கூறினார்.