கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரன். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊத்தங்கரையிலிருந்து மாற்றலாகி மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்தார். இவர் வந்த நாளில் இருந்து இவரை சந்திக்க வரும் பொது மக்கள் பெரும்பாலோரின் குறைகளை காது கொடுத்து கேட்காமல், தனது கணத்த குரலால் காட்டு கத்து கத்தி அலுவலகத்தை விட்டே விரட்டி விடுவதாக பொது மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், கடந்த வாரம் பாப்பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர், கிராமத்தில் 100நாள் உறுத்தியளிப்பு திட்டத்தில் நடைபெறும் சில குழப்பங்கள் குறித்து விபரம் கேட்டபோது, மொத்த அலுவலகமே அதிரும் அளவுக்கு கத்தி கூப்பாடு செய்து அவர்களை அலுவலகத்தை விட்டு வெளியே விரட்டியுள்ளார்.
இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். நாளொன்றுக்கு ஒருவரையாவது இவர் கத்தி கூச்சலிட்டு வெளியே அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளதால், இவரை சந்திக்க பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
இவரது நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் வரை தெரிந்திருந்தும், அமைதி காத்து வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதியும், மகேஸ்வரன் உடல் நிலை கருதியும், அவரை பொது மக்களை சந்திக்காத துறைக்கு மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.